பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140 ) சுந்தர சண்முகனார்

ஒரு பிள்ளை உலகில் இருக்க முடியுமா? அரசன் ஆணையிட வேண்டும் என்பதில்லையாம்- சிற்றன்னை ஆணையிட்டாலே போதுமாம். தம்பியின் நன்மை தனது நன்மையாம். இது பெரிய நன்மையாம். ஆணையைத் தலைமேல் ஏந்துகிறானாம். உடனேயே புறப்படு கின்றானாம். கைகேயி விடை கொடுக்கும் முன்பேதானாகவே விடைபெற்றுக் கொண்டானாம். எத்தனை முறை திரும்பத் திரும்பப் படித்தாலும் தெவிட்டாதது இப்பாடல். இந்தப் பாடலுக்கு உள்ளுறைப் பொருள் ஒன்று கூறுவதும் உண்டு. 'மன்னவன் பணியன்றாகில் நும்பணி மறுப்பனோ' என்பதற்கு, இது மன்னவன் பணி (அன்று) அல்ல; ஆனால் உன் பணிதான்- நான் மறுக்க மாட்டேன்- என்று பொருள் கூறுவதுண்டு. மேலும், 'என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது. அன்றோ என்பதற்கு, என் பின்னவன் பெற்ற செல்வம் என்பதும், நான் இப்போது பெற்றுள்ள மரவுரியணிந்த வாழ்க்கைதான்- என்றும் பொருள் கூறுவதுண்டு. பின்னால், பரதனும் பதினான்காண்டு காலம் மரவுரி பூண்டு நகருக்கு வெளியே நந்தியம் பதியில் தவக் கோலத்துடன், இராமனது பாதுகையை வைத்துக் கொண்டு வழிபடப் போகின்றவனே. இந்த உள்ளுறைப் பொருள் குறிப்பாய் இந்தப் பாடலுக்குள் அமைந்துள்ளது.


நகர் நீங்கு படலம்

காதல் திருமகன்

இராமனது எளிய தோற்றத்தைக் கண்ட கோசலை, முடிசூட்டற்கு ஏதாவது இடையூறு ஏற்பட்டதா என்று கேட்க, இராமன் கை குவித்து வணங்கிக் கூறுகிறான்: உன் அன்பிற்கு உரிய திருமகனும் குறைவில்லாத உயர்