பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

160 - சுந்தர சண்முகனார்


பொருந்திய குழலினும், நரப்பு எறிந்து மீட்டும் தமிழ் யாழினும் இனிய சொல் பேசும் கிளியே- எனச் சீதையை விளிக்கின்றான்:

குழுவு நுண்தொளை வேயினும் குறிநரம்பு எறிவுற்று
எழுவு தண்தமிழ் யாழினும் இனியசொல் கிளியே

(28)

என்பது பாடல் பகுதி. தண் தமிழ்யாழ் என்பதற்குக் குளிர்ந்த இனிய யாழ் என்பது பொருள். தமிழ் என்றால் இனிமை என்ற பொருள் இருக்க மற்றும் ஒரு கருத்து இதில் மறைந்து கிடக்கிறது. அதாவது:- இப்போது தமிழகத்தில் வீணைதான் ஆட்சி புரிகிறது. யாழைக் காணோம். பண்டு தமிழகத்தில் வீணையின் இடத்தில் யாழே விளங்கிற்று. வடக்கேயிருந்து வீணை வந்ததும் யாழ் மறையலாயிற்று. யாழ் தமிழ் இசைக் கருவி' என்னும் கருத்துதான் 'தமிழ் யாழ்' என்பதில் மறைந்திருப்பது.

திருவடி சூட்டு படலம்

உயிரும் ஒழுக்கமும்

பரதன் படைகளுடன் சித்திர கூடத்தை அடைந்தான். இந்தப் படைகள் தயரதன் அமைத்த படைகளே அல்லவா? இவற்றைத் தயரதனின் படைகள் என்கிறார் கம்பர். தயரதன், சொன்ன சொல் தவறாத ஒழுக்கத்திற்காக உயிரைவிட்டவன். அதை இங்கே குறிப்பிட்டுள்ளார். படைகள் பாலை நிலத்தையும் மருதம் போல் எண்ணிக் கடந்து சித்திர கூடம் சேர்ந்தனவாம்:

வன்தெறு பாலையை மருதம் ஆமெனச்
சென்றது சித்திர கூடம் சேர்ந்ததால்
ஒன்று உரைத்து உயிரினும் ஒழுக்கம் நன்றெனப் பொன்றிய புரவலன் பொருவில் சேனையே

(24)