பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164 சுந்தர சண்முகனார்


இன்பப் பசிக்கு உணவு கிடைக்காமல் பெண்கள் உள்ளம் வெம்புகின்றனர். மணமாகாத கன்னியர் இராமனை அடைந்தது போல் கண்ட கனாவுக்கு இடையூறாகத் தென்றல் வீசி அவர்களை எழுப்பி விட்டது:

இனமலர்க் குலம் வாய்விரித்து இளவாச மாருதம் வீசமுன்
புனை துகில்கலை சோரநெஞ்சு புழுங்கினார் சில பூவைமார்;
மன அனுக்கம் விடத் தனித்தனி வள்ளலைப் புணர் கள்ள இன்
கனவினுக்கு இடையூறு அடுக்க மயங்கினார் சில கன்னிமார்

(56)

தென்றலின் திருவிளையாடலால் உடல் குளிர்ந்தும், உள்ளம் புழுங்கியிருக்கிறதாம். கன்னியர்கள் கனவு கலைந்தமைக்காக மயங்கினராம்.

அரா நுழைவு

காம உணர்வைத் தூண்டும் மன்மதனின் அம்பாலும் திங்களாலும் காற்றாலும் உயிர் சோர்ந்துள்ள மங்கையரின் செவிகளில், காலையில் பண்ணோடு பாடப்படும் பாடலின் இசை நுழைந்தது செவிகளில் பாம்பு நுழைந்ததைப் போல் துன்புறுத்தியதாம். பண்ணும் காம இன்பத்தைத் தூண்டுவதுண்டு.

மொய் அராகம் நிரம்ப ஆசை முருங்கு தீயின் முழங்கமேல்
வை அராவிய மாரன் வாளியும் வான் நிலா நெடு வாடையும்
மெய் அராவிட ஆவி சோர வெதும்பு மாதர்தம் மென் செவி
பை அரா நுழைகின்ற போன்றன பண் கனிந்து எழு பாடலே

(58)

அராகம் = அரபி. வை அராவிய = கூர்தீட்டிய, இன்பப் பொருள்கள் காம உணர்வைத் தூண்டும் என்ற அடிப் படையில் பண் கனிந்த பாடல் துன்புறுத்தியதாகக் கற்பனை செய்யப்பட்டுள்ளது.

தடங்கண் நல்லார்

குவளை மலரின் அழகையும் கருநிறத்தையும்-வேலின் சொல்லும் கொடுமையையும் குழைத்துக் கூட்டி,