பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 161


துண்டு. அவ்வாறே இந்தக் கற்பனை அமைந்துள்ளது. கலுழி என்பது நீரின் மிகுதியைக் குறிக்கிறது.

இழுக்கலில் வழுக்கல்

இராமனுக்குக் காடு என்பதை அறிந்தும் அதைப் பொறுத்துக் கொண்டிருக்கின்ற நம் கல் நெஞ்சத்தை மழுப்படையால் பிளப்போம் என்று கூறிக் கொண்டு சிலர் ஓடினர்; ஆனால், அவர்கள், ஊற்றுப்போல் கண்களிலிருந்து பெருகும் கண்ணீரால் சேறாகிய வழுக்கல் தரையில் வழுக்கி விழுந்து துன்புற்றனராம்.

முழுக் கலின் வலிய நம் முரி நெஞ்சினை மழுக்களின் பிளத்தும் என்றோடுவார் வழி
ஒழுக்கிய கண்ணின் நீர்க் கலுழி ஊற்றிடை இழுக்கலில் வழுக்கி வீழ்ந்து இடர் உற்றார் சிலர்

(189)

மழு என்பது ஒரு படை (ஆயுதம்). பெரிய கல்லைவிட வலிய- கொடிய மனமாம். இப்பாடல் மக்களின் உணர்வைப் புலப்படுத்துகிறது.

குகப் படலம்

செல்வன் சென்றான்

மன்னன் மறைந்தது போலவே செங்கதிர்ச் செல் வனும் (ஞாயிறு) மறைந்தான். மன்னனும் இருள் போன்ற பகைவரை ஒடச் செய்தவன்- கதிரவனும் இருளை ஒடச் செய்தவன். மன்னன் எட்டுத் திசைகளிலும் உள்ளாரை வென்றவன்- கதிரவனும் எல்லாப் பக்கங் களிலும் உள்ள இருளை வெல்பவன். மன்னன் தனது ஒற்றை ஆணை உருளையால் (ஆக்ஞா சக்கரத்தால்) உலகை ஆண்டவன்- கதிரவன் ஒற்றை உருளை பூண்ட தேரில் இருந்து உலகை ஆள்பவன். மன்னனுக்கும் புகழ் உண்டு- கதிரவனுக்கும் புகழ் உண்டு. மன்னனும் எல்லாருக்கும் அருள் புரிந்தவன்- கதிரவனும் எல்லாரையும் காப்பவன். இத்தகைய மன்னன் வீழ்ந்ததுபோலவே கதிரவனும் மேலைப் பக்கல் சென்று வீழ்ந்தான்.