பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11. உவமை- உருவகங்கள்

ஒப்புமைக்கலை

ன்கு தெரியாத ஒன்றை விளக்குவதற்கு நன்கு தெரிந்த ஒன்றை 'அதுபோல் இது' என்று எடுத்துக் காட்டுவது உவமை- ஒப்புமை எனப்படும். இந்த ஒப்புமை ஓர் இயற்கைக் கலையாகும். புலவர்கள் மட்டுமா- கல்வியறிவு இல்லாத பொது மக்களும்- எளிய மக்களும் பேசும்போது ஒப்புமை கூறுவது வழக்கம். எனவே, இது மக்கள் கலையுமாகும். ஓர் ஒப்புமையும் சொல்ல வராவிடினும், 'என்னமோ சொல்லுவாங்களே அதுபோல'- என்றாவது இனம் தெரியாத ஒப்புமை கூறப்படும். இவ்வாறு ஒப்புமை காட்டுவது 'தெரிந்ததிலிருந்து தெரியாததற்குச் செல்லுதல்' என்னும் உளவியல் முறையுமாகும்.

ஒருவரின் முகமலர்ச்சியை விளக்குவதற்குத் தாமரை போல் அவர் முகம் மலர்ந்திருந்தது என்று கூறுவது உவமை- ஒப்புமையாகும். இதையே சுருக்கித் தாமரை முகம் எனலாம். தாமரை முகம் என்பதையே திருப்பிப் போட்டு 'முகத் தாமரை' என்று கூறுவது உருவகமாகும். தாமரை முகம் என்பதில், தாமரை- முகம் என இரு பொருள்கள் சுட்டப்படுகின்றன. முகத் தாமரை என்பதில் இரு பொருள்கள் இல்லை; முகமாகிய தாமரை- முகமே தாமரை என முகத்தையே தாமரையாக்கிக் காட்டுவது