பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 - சுந்தர சண்முகனார்


உருவகம் எனப்படும். உவமை ஆங்கிலத்தில் Simile: என்றும், உருவகம் Metaphor என்றும் வழங்கப் பெறும்.

படிக்காத மக்களே- எழுதத் தெரியாத மக்களே உவமையைக் கையாளும்போது, படித்த பாவலர்கள் எழுத்தாளர்கள் உவமையைக் கையாளாமல் விடுவார்களா என்ன? எழுத்துப் படைப்பின் இன்றியமையாத ஒர் உறுப்பு உவமையாகும். கவிஞர்கள் உவமையைக் கையாள்வதில் தங்கள் கை வரிசைகளையெல்லாம் காண்பிப்பார்கள். எவ்வளவுக்கு எவ்வளவு மிகுதியாக உவமையை ஒருவர் கையாள்கிறாரோ- அவ்வளவுக்கு அவ்வளவு அவரை உயர்ந்த கவிஞராக எடை போடு வாரும் உளர். உவமைக் கவிஞர்' என்ற பட்டம் சூட்டு வதும் உண்டு.

இந்தக் கலையில் கம்பரும் இளைத்தவரோ சளைத்தவரோ அல்லர். எங்கெங்கே எவ்வளவு உவமை-உருவகங்களைக் கையாள முடியுமோ- அங்கங்கே அவ்வளவையும் கையாண்டுள்ளார். இந்த அடிப்படையுடன், கம்பர் அயோத்தியா காண்டத்தில் படைத்துக் காட்டியுள்ள முத்தான உவமை- உருவகங்களுள் சிலவற்றைக் காண்போம்.

மந்திரப் படலம்

மந்திரக் கிழவர்

தேவர்கட்கு வியாழன் குருவாய் இருப்பதுபோல், தயரதனுக்கு மந்திரக் கிழவர்கள் (அமைச்சர்கள் வசிட்ட முனிவர் முதலானோர்) இருந்தனராம்:

இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை வருக என்று ஏவினான்

(3)