பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 181


துறப்பும் பிறப்பும்

தயரதன் மந்திரக் கிழவர்களை நோக்கித் தான் துறவு கொள்ளப் போவதாகக் கூறுகிறான்; பிறப்பு என்னும் பெருங்கடலைக் கடக்க, துறவு என்னும் தெப்பம் தேவையாம்:

துறப்பு எனும் தெப்பமே துணை செய்யாவிடின் பிறப்பு எனும் பெருங்கடல் பிழைக்கல் ஆகுமோ?

(20)

இப்பாடலில் துறப்பு தெப்பமாகவும் பிறப்பு கடலாகவும் உருவகிக்கப்பட்டுள்ளன.

இரண்டு கன்றுகள்

தயரதன் தான் முடி துறந்து இராமனுக்கு முடிசூட்டப் போகிறேன் என்றதும், இராமன் முடிசூடுவதற்காக மகிழ்ச்சியும், தயரதன் துறப்பதற்காக வருத்தமும் கொண்டு, இரண்டு கன்றுகட்கு இரங்கும் ஆவைப் போல் ஆனார்களாம் அவையோர்கள்.

திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும் சிந்தை புரண்டு மீதிடப் பொங்கிய உவகையர் ஆங்கே வெகுண்டு மன்னவன் பிரிவெனும் விதிர்ப்புறு நிலையால்
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார்

(31)

இரண்டாவது கன்று போட்ட ஆ (பசு) புதுக் கன்றுக் காக மகிழினும், இவ்வளவு நாள் உடனிருந்த முதல் கன்று பிரிவதைப் பற்றி வருந்துமாம்- அதுபோன்று காணப் பட்டனர் அவையில் இருந்த மந்திரக் கிழவர்கள்.

நறவும் வண்டும்

தயரதன் ஆணைப்படி இராமனை அழைக்கச் சென்ற சுமந்திரன், இராமனது அழகு என்னும் தேனை, தன் கண்களாலும் உள்ளத்தாலும் வண்டுபோல் நுகர்ந்தான்.

அண்ணல் ஆண்டிருந்தான்; அழகு அருநறவு எனத் தன்
கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்புறக் கண்டான்

(49)