பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186 - சுந்தர சண்முகனார்


திலகம் (பெறுதற்கு அரிய) திலகம் என்றார் கம்பர். கணவன் இருப்பவர்களே பொட்டிட்டுக் கொள்வர்; கணவனை இழந்தவர்கள் பொட்டு வைத்துக் கொள்வதில்லை- என்பது ஒருவகை மரபு. கணவனாகிய தயரதன் இன்னும் சில மணி நேரத்தில் இறக்கப் போகிறான்- கைகேயி பொட்டு இழக்கப்போகிறாள் என்பதை உள்ளடக்கி அரும்பெறல் திலகம்' என்றார்.

மேலும் கைகேயி, எல்லா அணிகலன்களையும் சிதறி, கூந்தல் தரையில் படும்படிப் பரப்பி, கண்ணில் பூசிய மை போலி அழுகையால் ஒழுக, பூக்கள் உதிர்ந்த ஒரு கொம்பைப்போல் (கொடியைப்போல்) தரையிலே படுத்துப் புரண்டாள்:

தாவில் மணிக்கலம் மற்றும் தனித்தனிச் சிதறி, நாவி ஓதியை நானிலம் தைவரப் பரப்பி,
காவி உண்ட கண் அஞ்சனம் சான்றிடக் கலுழா,
பூ உதிர்ந்த தோர் கொம்பெனப் புவிமிசைப் புரண்டாள்

(3)

எல்லா அணிகலன்களும் நீக்கப்பட்டமையால் பூ உதிர்ந்த கொம்பு எனப்பட்டாள் கைகேயி.

வேகம் அடங்கிய வேழம்

பாம்பு போன்ற கொடிய கைகேயியின் நாக்கின் வழி வந்த சொற்களாகிய நஞ்சைக் கேட்டதும், யானை போன்ற தயரதன், பாம்புக் கடியால் வேகம் (வலிமை) இழந்து விழும் யானைபோல் விழுந்தான்:

நாகம் எனும் கொடியாள் தன் நாவின் வந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்தழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான்

(15)

கொடியாள் என்பது, கொடியவள் என்னும் பொருளையும் கொடி போன்றவள் என்னும் பொருளையும் தரும். பாம்புக்குப் பல்லிலிருந்து நஞ்சு வரும்;