பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 சுந்தர சண்முகனார்


தயரதன் மோட்சப் படலம்

கை விளக்கு

பொய் வாழ்க்கையினராகிய அரக்கருக்கு உதவி செய்யப் போகின்றவர் போன்ற இருளைப் போக்க, வானம் கை விளக்கு எடுத்தது போல் திங்கள் தோன்றியது.

பொய் வினைக்கு உதவும் வாழ்க்கை அரக்கரைப் பொருந்தி அன்னார்
செய்வினைக்கு உதவும் நட்பால் செல்பவர்த் தடுப்ப தேய்க்கும்
மைகுழைத் தெனவே வந்து வயங்கு இருள் துரக்க வானம்
கைவிளக்கு எடுத்த தென்னப் பொலிந்தது கடவுள் திங்கள்

(2)

திங்களை வணங்கும் மரபு உண்மையால் கடவுள் திங்கள் எனப்பட்டது. திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்' என்பது சிலப்பதிகாரத் தொடக்கப் பகுதி. கை விளக்கு என்பது நடைமுறை வழக்காறாகும். மக்களுக்குக் கை விளக்கு போல், வானத்திற்குத் திங்கள் கை விளக்காம். திங்களைக் கை விளக்கு என ஏன் சொல்ல வேண்டும்? மக்கள் பெரியபெரிய விளக்குகளையெல்லாம் பயன்படுத்துவதுண்டு. மின்சாரம் இல்லாத காலத்தில், இருளில் சிறிய கை விளக்கை எடுத்துக் கொண்டு அங்குமிங்கும் செல்வர். மக்களுக்குப் பெரிய விளக்குகள் உள்ளது போல வானத்திற்கு ஞாயிறு பெரிய விளக்காயிருப்பதால், திங்கள் கை விளக்கு எனப்பட்டது. மற்றும் இங்கே,

இருளை நீங்கக் கைவிளக்கு ஏந்தியாங்கு
வீறுயர் மதியம் தோன்ற...

(1542)

என்னும் சீவக சிந்தாமணிப் பாடல் ஒப்பு நோக்கத் தக்கது.

மக்களால் மாய்வு

தயரதன் இறந்தமையை அறிந்து கோசலை புலம்புகிறாள்: மன்னன் நோய் இல்லாமலும் பகைவரின் வாள்