பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194 - சுந்தர சண்முகனார்


செருந்தியின் மலர்தாங்கும் செறி இதழின் அசோகம் பொருந்தின களி வண்டின் பொலிவன பொன் ஊதும்
இருந்தையின் எழுதி ஒத்து எழுவன இயல் காணாய்

(8)

சித்திர கூடப் படலம்

சிங்கத்தோடு போர் செய்து புண்பட்ட யானையின் குருதியில் யானையிடம் பிறந்த முத்துகள் கலந்து கிடப்பது, பெண்கள் கணவருடன் ஊடல் கொண்ட காலத்தில் சிந்தின குங்குமக் குழம்பில் அவர்கள் மாலையிலுள்ள முத்துக்கள் சிதறிக் கலந்திருப்பதுபோல் தோன்றுகிறதாம்:

சலம் தலைக் கொண்ட சீயத்தால் தனி மதக் கதமா
உலந்து வீழ்தலின் சிந்தின உதிரத்தில் மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்தென வேழ முத்து இமைப்பன காணாய்

(6)

முத்து பிறக்கும் இடங்களில் யானையும் (யானைக் கொம்பும்) ஒன்று என்பது இப்பாடலால் புலனாகும்.

பள்ளி படைப் படலம்

நிற்கும் பரிசிலர்

அகன்ற குளக்கரையின் கீழே உள்ள பயிர்கள், மடை வாயிலிலிருந்து நீர் வராமையால், கருமிகளின் கடை வாயிலில் வருந்தி நிற்கும் பரிசிலர் போல் வாடினவாம்.

அலர்ந்த பைங்கூழ் அகன்குளக் கீழன
மலர்ந்த வாயில் புனல்வழங் காமையால்
உலர்ந்த, வன்கண் உலோபர் கடைத்தலைப்
புலர்ந்து நிற்கும் பரிசிலர் போலவே

(26)