பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 205


மேலை விதி= முன்னாலேயே அமைந்து விட்ட விதி. மேலை வதியினை வென்றவர் உளரோ' என்பது: வேற்றுப் பொருள் வைப்பு.

வனம் புகு படலம்

காட்டில் இலக்குவன் குடில் அமைத்ததும் இராமன் கூறுகிறான். அனிச்ச மலரினும் மெல்லிய அடியாள் சீதை காட்டில் நடந்து வந்தாள். ஒரு குற்றமும் அறியாத தம்பி இலக்குவன் காட்டில் எப்படியோ குடில் அமைத்து விட்டான். எதையும் இழந்து இல்லாதவரானவர்க்கும் முயன்றால் முடியாதன யாவை? (முடியாதன இல்லை-- எல்லாம் முடியும்) என்று கூறுகிறான்.

மேவு கானம் மிதிலையர் கோன் மகள்
பூவின் மெல்லிய பாதமும் போந்தன
தா வில் எம்பி கை சாலை சமைத்தன
யாவை யாதும் இலார்க்கு இயையாதவே

(50)

காட்டின் கடுமையான வழியில் நடந்தறியாத சீதை நடந்தாள். குடில் கட்டியறியாத இலக்குவன் குடில் அமைத்தான். எனவே, துணையில்லாரும் எதையும் முயன்று செய்துகொள்ள முடியும் என்பது கருத்து. இப் பாடலில், 'யாவை யாதும் இலார்க்கு இயையாதவே" என்பது வேற்றுப் பொருள் வைப்பு.

ஆறு செல் படலம்

தெருள் மனத்தார்

முடிசூடிக் கொள்ள வேண்டுமென வசிட்டன் பரதனை வற்புறுத்திக் கூறுகிறான். பரத! அறத்தை நிலை நாட்டுதல் என்பது ஒர் அரிய பெரிய செயல் என்பதை நீ அறிவாய். எனவே, நீ அறத்தை மதித்து நடந்து கொள்ளின் இருமைப் பயனும் கிடைக்கும். இது, தெளிந்த