பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 215


ஒலி கேட்டது. உடனே ஒலி வந்த பக்கம் யான் அம்பு எய்தேன். அப்போது ஒர் இளைஞனின் அலறல் கேட்டது. போய்ப் பார்த்தேன். யானை என்று எண்ணி, நேரில் பார்க்காமலேயே அவன்மேல் அம்பு எய்து விட்ட தவறு எனக்குப் புரிந்தது. நீ யாரப்பா என்று அவனைக் கேட்டேன். அவன் கூறினான்: கண்களையிழந்து அகவை முதிர்ந்துள்ள என் பெற்றோர்களை ஆங்கு ஒருபால் இருக்கச் செய்து அவர்களின் தாகத்தைத் தீர்க்கத் தண்ணிர் கொண்டு செல்ல வந்தேன். இங்கே நீ என்மேல் அம்பு எய்து விட்டாய். இதோ நான் இறக்கப் போகிறேன். என் பெற்றோர்கட்கு நீர் கொண்டு சென்று கொடுத்து என் முடிவையும் கூறுக என்று சொல்லி அவன் இறந்து விட்டான்.

பின்னர் யான் தண்ணிரோடு அவனது உடலையும் எடுத்துக் கொண்டு அவன் பெற்றோர் இருக்கும் இடத்தைத் தேடியடைந்தேன். யான் சென்ற ஒலியைக் கேட்டு, அவர்கள் தம் மகன்தான் வந்து விட்டான் என்றெண்ணிப் பின்வருமாறு அன்பான நயமொழி கூறினர்:

'தம்பி இன்னும் வரவில்லையே! தண்ணிர் கொண்டு வரச் சென்றானே! நிற்க மாட்டானே! விரைவில் வந்து விடுவானே-ஓ-ஓ- இதோ தம்பி வரும் ஒலி கேட்கிறது. இதோ அருகே வந்தே விட்டான். எங்கள் கண்ணான செல்வமே! நீர் கொணர உனக்கு இவ்வளவு நேரமா ஆயிற்று! தொலைவு மிகுதியோ கண்ணே! நீ வரக் காலம் நீட்டித்ததால், எங்கள் செல்வனாகிய நினக்கு என்ன நேர்ந்ததோ என்று பதைபதைத்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளையாய் வந்து விட்டாய். எங்கள் ஆருயிரே ! எங்களைத் தழுவிக் கொள்ள வா கண்ணா!' என்று அவர்கள் மகன் வந்த மகிழ்ச்சியைச் சுவைத்துக் கொண்டிருந்தனர். அப்போது யான் அவர்களிடம் நடந்தன. அனைத்தும் கூறிப் பொறுத்தருள வேண்டினேன்.