பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/223

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 223


குலவேற்றுமை பாராட்டாது கூறியிருப்பது உள்ளத்தைத் தொடுகிறது. குரிசில் = சிறந்த ஆண் மகன்.

ஐவிரும் ஒருவீர்

குகனைப் புரிந்து கொண்ட கோசலை, என் பிள்ளைகளே! வருந்தாதீர். இராமன் நாடு விட்டுக் காடு சென்றதும் ஒரு வகையில் நன்மை ஆயிற்று. அதாவதுஇராமன் பிரிந்ததால் குகன் எனக்கு மைந்தனாகவும் உங்கட்கெல்லாம் அண்ணனாகவும் கிடைத்தது பெரிய நன்மையன்றோ? எனவே, நீங்கள் ஐவரும் ஒருவராய்-உடல் ஐந்தெனினும் உயிர் ஒன்றாய் ஒன்றி இந்நாட்டைக் காப்பீராக- என்று கோசலை வாழ்த்தினாள்:

நைவீர் அலீர் மைந்தீர் இனித் துயரால்;
நாடு இறந்து காடு நோக்கி
மெய்வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்று
ஆம் அன்றே! விலங்கல் திண்தோள்
கைவீரக் களிறனைய காளை இவன் தன்னோடும் கலந்து நீவிர்
ஐவீரும் ஒருவீர் ஆய் அகல் இடத்தை நெடுங்
காலம் அளித்திர் என்றாள்

(66)

மெய் வீரர் - இராமர். கோசலைக்கு பிள்ளைகள் ஐவர் கிடைத்தனராம்- உடன் பிறந்தார் ஐவர் ஆயினராம். இனித் துயரால் நைவீர் அலீர் என்றதனால், குகன் துயர் தீர்க்கும் துணிவுடையவன் என்பது பெறப் படும். இராமன் அரசை விட்டுக் காடு சென்றதும் நன்மையே என்றால், அரசாட்சிக்குப் பதில் குகன் கிடைத்திருக்கிறான்- அவ்வளவு உயர்ந்தவன் குகன் என்று கொள்ளல் வேண்டும். 'கலந்து நீவிர் அகல் இடத்தை நெடுங்காலம் அளித்தீர்' என்னும் பாடல் பகுதியில் அரிய பெரிய கருத்துகள் இரண்டு உள்ளன. ஒன்று: நீங்கள் நெடுங்காலம்- அதாவது இறுதிவரை- பிரியாது கலந்து ஒன்றியிருக்க வேண்டும் என்பது; மற்றொன்று: