பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

226 - சுந்தர சண்முகனார்


விடாதபடி எப்போதும் அவனை விட்டுப் பிரியாதவனாம் இலக்குவன்.

மனத்தால் அளந்தவள்

கணவனைச் சுடுகாட்டிற்கு அனுப்பி, பிள்ளையைத் துன்பத்தில் தோய விட்டு, மூத்தவனைக் காட்டிற்கு ஏகச் செய்து, திருமால் 'வாமனாவதாரம்' எடுத்து மூன்று அடியாக அளந்த உலகம் முழுவதையும் தன் மனத்தாலேயே அளந்து பெற்ற கைகேயியைக் குறிப்பிட்டு, யார் இவர் என்று குகன் கேட்கப் பரதன் கூறுகிறான்:

சுடு மயானத்திடை தன் துணை ஏகத்
    தோன்றல் துயர்க் கடலில் ஏகக்
கடுமையார் கானகத்துக் கருணை ஆர்கலி
    ஏகக் கழல்கால் மாயன்
நெடுமையால் அன்றளந்த உலகெலாம்
    தன்மனத்தே நினைந்து செய்யும்
கொடுமையால் அளந்தாளை ஆர்இவர்
    என்றுரை என்னக் குரிசில் கூறும்

(68)

திருமால் நீ மாவலி மன்னனிடம் மூன்றடி மண் கேட்டு நெடிய உருவெடுத்து உலகம் முழுவதையும் மூன்று அடியாக அளந்தாராம். ஆனால், கைகேயியோ, உலகத்தைத் தன் மனத்தாலேயே அளந்து விட்டாளாம். அதாவது- மனம் ஒரு நொடி நேரத்திற்குள் உலகம் முழுவதையும் சுற்றி விடும் அல்லவா? ஆ என்ன கொடுமை!

என்னை ஈன்றாள்

பரதன் குகனுக்குக் கைகேயியை அறிமுகப்படுத்து கிறான்: இவள் துன்பம் யாவும் தோன்றச் செய்பவள்;