பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/227

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 227


பழியை வளர்க்கும் செவிலித் தாய். இவள் குடலில் நெடுங்காலம் கிடந்தேன். அதனால் எனது உயிர்ச் சுமை குறைந்தது- உயிர் இல்லாத உடம்பு போன்றதாகவே என் உடல் எனக்குத் தோன்றுகிறது. இராமன் அரசு இழந்ததால் உலகம் முழுதும் துயர் உற்றிருக்கவும், இவள் ஒருத்தி மட்டுமே, துன்பத்தின் சுவடு கூடத் தெரியாத முகத்தளாய் உள்ளாள். இவள் யாரென அறிந்திலையேல், இவள்தான் என்னைப் பெற்ற கைகேயி என்று அறிந்து கொள்- என்றான்:

படர் எலாம் படைத்தாளைப் பழி வளர்க்கும்
    செவிலியைத் தன் பாழ்த்த பாவிக்
குடரிலே நெடுங் காலம் கிடந்தேற்கும்
    உயிர்ப் பாரம் குறைந்து தேய,
உடர் எலாம் உயிர் இலா எனத் தோன்றும்,
    உலகத்தே ஒருத்தி அன்றே,
இடர் இலா முகத்தாளை அறிந்திலையேல்
    இந்நின்றாள் என்னை ஈன்றாள்

(69)

படர் = துன்பம். குடர் - குடல். உடர் = உடல். குடர், உடர் என்பன, சொல்லின் கடைசியில் 'ல்' போல் நிற்பதால் கடைப்போலி' எனப்படும். 'முந்தித் தவங் கிடந்து முந்நூறு நாள் சுமந்து' என்றார் பட்டினத்தார். முந்நூறு நாளுக்குள்ளேயே குழந்தை பிறந்துவிடும் பெரும்பாலும். பரதனும், எல்லாரும் தாயின் குடலில் கிடந்த கால அளவுதான் கிடந்திருப்பான்; ஆனால் அது பாவிக்குடல் ஆனதால், நெடுங் காலம் கிடந்ததாகக் கூறியுள்ளான். அவனுக்கு முந்நூறு நாள், முந்நூறு திங்களாகவோ- முந்நூறு ஆண்டுகளாகவோ தோன்றுகிறது போலும். தாயின் குடலில் கிடக்கும்போதும் பின்னர் வெளிவரும் போதும் குழந்தைக்குத் துன்பம் இருந்திருப்பினும் பின்னால் அது தெரியாதல்லவா?