பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/229

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 229


முதலிய ஐந்து பூதங்களுமே ஒரு காலத்தில் அழிந்து விடும். அங்ஙனம் இருக்க, தயரதன் உயிர் போனதற்காக நீ வருந்துதல் ஏன்?- என்று வினவுகின்றான்:

கண்முதல் காட்சிய கரைஇல் நீளத்த
உண்முதல் பொருட்கெலாம் ஊற்றம் ஆவன மண்முதல் பூதங்கள் மாயும் என்றபோது
எண்முதல் உயிர்க்குநீ இரங்கல் வேண்டுமோ?

(74)

இந்தப் பாடலில் அரிய பெரிய கருத்துகள் அடங்கி யுள்ளன. மாப்பேருலகத்தில் (universe- பிரபஞ்சத்தில்) உள்ளவை விண், காற்று, தீ, நீர், மண் என்னும் ஐந்து மூலப் பொருள்களே. இந்த ஐந்தின் விரிவே மாப் பேருலகம். உலகிலுள்ள எல்லாப் பொருள்களும் இந்த ஐந்தின் திரிபுகளே. உயிர்களின் உடம்பு, இந்த ஐந்து பூதங்களின் (மூலப் பொருள்களின்) திரிபாக்கமே. வட மொழியில் 'பஞ்ச பூத பரிணாம சரீரம்' என்பர். இதனைத் தமிழில் ஐம்பூதங்கள் திரிபாக்கம்' என்று கூறலாம். பரிணாமம் =திரிந்து மற்றொன்றாக ஆவது.

நம் உடம்பில் மெய், வாய், கண், முக்கு, செவி என்னும் அறிவுப் பொறிகள் ஐந்து உள்ளன. இவற்றை வட மொழியில் 'ஞானேந்திரியம்' என்பர். மற்றும் வாக்கு (பேசும் உறுப்பு) கை, கால், சிறுநீர் கழிக்கும் உறுப்பு, மலம் கழிக்கும் உறுப்பு என்னும் ஐந்து செயல் பொறிகள் உள்ளன. இவற்றை வடமொழியில் 'கண்மேந்திரியங்கள்' என்பர். சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் (மணம்) என்னும் ஐந்தும் ஐம்புலன்கள் எனப்படும். விண் என்னும் பூதத்தின் வாயிலாகச் செவி என்னும் பொறி, ஓசை என்னும் புலனை அறிகிறது- வாக்கு (ஒலி உறுப்பு) பேசுகிறது. 'வானொலி' என்னும் பெயர் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. காற்று என்னும் பூதத்தின் உதவியால் மெய் (உடம்பு முழுவதும்) என்னும் அறிவுப் பொறி, (தொடு உணர்வு) ஊறு என்னும் புலனை