பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

36 - சுந்தர சண்முகனார்

தலையாட்டுவர். இஃது ஒர் உலகியல் உண்மை. இனிக் கம்பரிடம் வருவோம்.

தயரதன் சிற்றரசர்களையெல்லாம் அழைத்து, யான் இராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன்; உங்கள் கருத்து என்ன என்று வினவினான். அவர்கள் அனைவரும் அப்படியே ஆகுக என்று தம் ஒப்புதலை அளித்தனர். பின்னர் தயரதன் அவர்களை நோக்கி, யான் என் மகன் மேல் உள்ள பற்றினால் இதைக் கூறினேன். நீங்கள் உடன்பட்டுக் கூறிய உயர்ந்த கருத்து, உண்மையிலேயே மகிழ்ச்சியால் கூறியதா? அல்லது, என் உள்ளம் நோகக் கூடாது- என்று கருதி என் உள்ளத்தின் நிறைவுக்காகக் கூறியதா அல்லது, இது தக்கதே என்று கருதிக் கூறியதா என்று வினவினான்.

மகன்வயின் அன்பினால் மயங்கி யான் இது
புகல நீர் புகன்ற இப் பொம்மல் வாசகம் உவகையின் மொழிந்ததோ உள்ளம் நோக்கியோ தகவென நினைந்ததோ தன்மை யாது என்றான்

(78)

என்பது பாடல். இங்கே, உள்ளம் நோக்கியோ' என்பது ஒர் உலகியல் உண்மையாகும்.

மந்தரை சூழ்ச்சிப் படலம்

விளையாட்டும் வினையும்

'விளையாட்டு வினையாயிற்று' என்று கூறுவது ஒர் உலகியல். கூனி மந்தரை கைகேயியின் மனத்தை மாற்றுவதற்காகக் கைகேயியின் மாளிகையை அடைந்தாள். சினத்தோடும் மடித்த வாயோடும், இராமன் சிறுவனாயிருந்தபோது மண்ணுருண்டையை வில்லினால் முதுகில் அடித்ததற்குப் பழிவாங்கும் எண்ணத்தோடும் கூனி சென்றாளாம்.