பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50 ) சுந்தர சண்முகனார்

தான்மட்டும் உண்ணும் ஒருவன் அடையக்கூடிய தீமையை யானும் அடைவேனாக என்கிறான். பாடல் பகுதி:

நறியன அயலவர் நாவில் நீர்வர
உறுபதம் நுங்கிய ஒருவன் ஆக யான்

(112)

நுங்குதல் = நிரம்ப 'லபக்- லபக்' என்று விழுங்குதல். உறுபதம்= மிக்க உணவு. ஈண்டு,

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று

(82) என்னும் குறளும், 'மருந்தே யாயினும் விருந்தோடுண்" என்னும் ஒளவையின் 'கொன்றை வேந்தன் அடி- (70) ஒப்பு நோக்கத்தக்கன.

மங்கையர் முன்

ஆடவர் பெண்களின் முன்னே தோல்வி உறுதலுக்கும் தாழ்த்தப்படுதலுக்கும் மிகவும் நாணுவது உலகியற்கையே. பரதன் மேலும் கூறுகிறான். மங்கைமார்கள் முன்னே, பகைவரின் அடியைப் பணியும் தலையை உடையவனாக யான் என்று சூளுரைக்கின்றான். பாடல் பகுதி:

மணிக்குறு நகை இள மங்கை மார்கள்முன்
தணிக்குறு பகைஞரைத் தாழ்க என் தலை

(1.15)

பெண்டிர் தோற்றவனை நோக்கி ஏளனமாகக் குறுநகை புரிவார்கள் என்னும் கருத்து இதிலே அடங்கி யுள்ளது.

தளை ஈர்த்த கால்

ஒருவனைக் காலில் விலங்கு பூட்டி இழுத்துச் சென்றால், அவன் தன் பகைவர் முன்னே- ஏன்- பொது மக்கள் முன்னேயும் மிகவும் நாணம் அடைவது இயல்பு.

புதுச்சேரியிலே பெரிய கடைத் தெருவின் நடுவிலே சிறைச்சாலை உள்ளது. பெரியவர்கள் கூடின ஒரு கூட்டத்திலே, 'கடைத் தெருவிலிருந்து சிறைச்சாலையை