பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 51

வேறிடத்திற்கு மாற்றச் செய்யவேண்டும். கடைத் தெருவின் வழியாகப் பலர் பார்க்க விலங்கிட்டுச் சென்றால் வெட்கமாயிருக்காதா'- என்று ஒருவர் கூறினார். அதை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை; 'கடைத் தெரு வழியாகப் பலர் பார்க்க அழைத்துச் சென்றால்தான், எவரும் குற்றம் செய்ய அஞ்சுவர்- என்று மற்றவர்கள் கூறிவிட்டனர்.

இதைத்தான் பரதனும் குறிப்பிடுகிறான்: இரும்பு விலங்கு பூட்டிய கால்களோடு பகைவர் முகத்தின் எதிரில் யான் விழிப்பேனாக- என்கிறான். பாடல் பகுதி:

இரும்பலர் நெடுந்தனை ஈர்த்த காலொடும் விரும்பலர் முகத்தெதிர் விழித்து நிற்கயான்

(116)

ஆறு செல் படலம்

மகளிரின் இரங்குதல்

ஒருவர் துணிவான மன வலிமையின்றி எடுத்ததற் கெல்லாம் சோர்ந்து போவாராயின், அவரை மற்றவர் நோக்கி, 'என்னையா! ஆண் பிள்ளையா நீ? பெண் பிள்ளைபோல் அது அதற்கும் சோர்ந்து போகிறாயே! பெண்களே அவ்வாறு சோர்வர். அவர்கள் மேல்போல் இருக்கிறதே! அவர்களினும் நீ கோழையாயிருக்கிறாயே,’’ என்று கூறுதல் ஒருவகை உலகியல். இங்கே, வசிட்டர் பரதனை நோக்கி, நீதான் முடி சூடிக்கொண்டு ஆளவேண்டும் எனக் கூற, பரதன் நடு நடுங்கினானாம்- நாக்குப் பேச முடியாமல் தடுமாறினானாம்- கண்களை இடுக்கிக் கொண்டானாம்- பெண்களைப்போல் நெஞ்சம் சோர்ந்து போனானாம். பாடல் பகுதி:

நடுங்கினன் நாத்தடு மாறி நாட்டமும்
இடுங்கினன் மகளிரின் இரங்கும் நெஞ்சினன்

(13)