பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் - 55

பட்டது. அந்தக் குப்பைக் குவியலில் முளைக்கும் செடி கொடிகள் செழிப்பாயிருந்தன. எனவே, குப்பையைத் திரட்டி வயலில் கொட்டி வளங்கண்டனர். பிறகு குப்பை ஒரு சிறந்த பொருளாகத் திரட்டப்பட்டது. நிலம் இல்லாதார் வீட்டுக் குப்பை விலைக்கு வாங்கப் பட்டது. இவ்வாறாகக் குப்பை தாழ் நிலையிலிருந்து உயர்நிலை பெற்றது. கழிவுப் பொருள்களின் குவியலுக்கு ஏற்பட்ட குப்பை என்னும் பெயர் மற்ற பொருள்களின் குவியலுக்கும் வழங்கப்படலாயிற்று.

நாளடைவில், நெல், வரகு, ஆம்பல், உப்பு, பாக்கு, அகில், சந்தனம், இரத்தினம், பன்மணிகள் பலவகைச் செல்வப் பொருள்கள் முதலியவற்றின் குவியலுக்கும் குப்பை என்னும் பெயர் உயர்நிலையில் வழங்கப்பட்டது. இதற்கு உரிய அகச் சான்றுகள் சில வருமாறு:

குப்பை நெல்லின் முத்தூறு தந்த (புறநானூறு, 24-22)

சில்விளை வரகின் புல்லென் குப்பை
ஆம்பல்-குப்பை கல்லாடம்

(புறநானூறு,327-2)

உவர்விளை உப்பின் குன்றுபோல் குப்பை (நற்றிணை, 138-1)

பளிக்காய்க் குப்பையும் பலம்பெய் பேழையும் (பெருங்கதை-2-2-72-பளிக்காய் = பாக்கு)

யானைவெண் கோடும் அகிலின் குப்பையும் (சிலப்பதிகாரம், 25-37)

சந்தின் குப்பையும் தாழநீர் முத்தும் (சிலப்பதிகாரம்,26-168-சந்து = சந்தனம்)

மரக்களி யன்ன திருத்தகு பொன்னும்
இரத்தினக் குப்பையும் இலங்கொளிப் பவழமும்

(பெருங்கதை,2-14-68,69)