பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 - சுந்தர சண்முகனார்

நன்றி ழைத்து அவண் நல்ல தவர்க்கு எலாம் கன்றுடைப் பசுவின் கடல் நல்கினாள்

(9)

பசுவின் கடல் என்பது, அளவற்ற பசுக்களைத் தந்தாள் என்பதைக் குறிக்கிறது. (தவசியர்க்குக் குருமா- பிரியாணி செய்துண்ணக் கோழியும் ஆடுமா தருவாள்?) தவசியர், பால் மட்டும் அருந்துபவர் ஆதலின் பசு தந்தாள். கன்று இல்லாத- மரத்துப் போன பசுவைக் கொடுத்தால் பால் கிடைக்காது ஆதலின், கன்றுடைப் பசு நல்கியதாகக் கம்பர் கூறியிருப்பது சிறப்பாயுள்ளது.

உயிரும் உடலும்

வசிட்டன் இராமனுக்கு உயர்ந்த கருத்துகளைக் கூறுகிறான்: உலகம் மன்னனின் உயிராகும். உலகமாகிய உயிரைத் தன்னுள் கொண்டு தாங்கும் உடல் மன்னனாவான். எனவே, நல்லாட்சி ஏற்று உயிர்களைக் காப்பதனினும் உயர்ந்த வேள்வி இல்லை- என்று வசிட்டன் கூறுகிறான். பாடல்:

வையம் மன்உயிர் ஆக, அம்மன் உயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யில் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ?

(25)

இப்பாடலில், மன்னனை உடலாகவும் உலகத்தை உயிராகவும் கம்பர் கூறியுள்ளார். ஆனால், வேறு புலவர்கள் சிலர் இதை மாற்றிச் சொல்லியுள்ளனர். அதாவது, உலகம் உடம்பு என்றும் அதற்கு உயிர் மன்னன் என்றும் கூறியுள்ளனர். அவற்றுள் சில காண்போம்:மோசி கீரனார் புறநானூற்றுப் பாடல் ஒன்றில்,

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான் உயிர் என்பது அறிகை
வேல்மிகு தானை வேந்தற்குக் கடனே

(186)