பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60 ) சுந்தர சண்முகனார்

முடிசூட்டிக் கொள் என்னும் கருத்தில் கூறுகிறான். இதை ஒருவகை வேள்வி என்கிறான். வேள்வித் தீயில் ஆடு மாடுகளின் உடல்கள் போடப்பட்டுத் தேவர்கட்கு அவி உணவாகிறது. மன்னனும் தன் உடம்பை வருத்தி உழைத்து உலகைக் காக்க வேண்டும். இந்தக் கருத்துகள் எல்லாம் கம்பர் பாடலில் அடங்கியுள்ளன. இங்கே திருமூலரின் திருமந்திர நூலில் உள்ள

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே

(724)

உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன் உடம்பினுக் குள்ளே உறுபொருள் கண்டேன் உடம்புளே உத்தமன் கோயில் கொண்டான் என்று உடம்பினை யானிருந்து ஓம்புகின் றேனே

(725)

என்னும் பாடல்கள் ஈண்டு எண்ணத்தக்கன. உடம்பு அழியின் உயிர் அழிந்து விடும்; இறைவன் உள்ளே இருப்பதற்கு உடம்பு கோயிலாக உள்ளது; அதனால் யான் உடலைக் காக்கிறேன்; அதனால் உயிர் வாழ முடிகிறது என்பது பாடல்களின் கருத்து. இறைவனுக்கு உடம்பு கோயிலாக இருப்பது போல், உலகினுக்கு மன்னன் இருப்பிடம் ஆகிறான். மன்னனாகிய உடம்பு அழிந்தால், உலகமாகிய உயிர் வாழ முடியாது. எனவே, தயரதனால் தாங்க முடியாத சுமையை நீ (இராமன்) தாங்காவிடின் உலகாகிய உயிர் அழியும்- என்ற குறிப்புடன் வசிட்டன் இராமனிடம் கூறியதாகக் கொள்ள வேண்டும்.

சூழ்நிலையை ஒட்டி மன்னன் உடம்பு போன்றவன் என்று கூறப்பட்டுள்ளதே தவிர, அரசன் உயிர் என்ற கருத்து கம்பருக்கும் உடன்பாடே. நகர் நீங்கு படலத்தில், இயங்கு பல் உயிர்க்கு ஓர் உயிர்என நின்ற இராமன் (213) என்று கம்பர் கூறியிருப்பது காண்க.