பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 67

கொண்டனர். இவர்கள் எம்மொழியில் உரையாடி யிருக்கலாம் என்பது வினாக் குறி. அகத்தியரைக் கம்பர் பின் வருமாறு அறிமுகப்படுத்தியுள்ளார்:- சூலப் படையினையும் நெற்றிக் கண்ணையும் உடைய சிவன், நான்கு வேதங்களினும் உயர்ந்து உலக வழக்கிலும் செய்யுள் வழக்கிலும் சிறந்துள்ள தமிழை அகத்தியர்க்குத் தந்தார். அந்தத் தமிழை அகத்தியர் உலகில் பரப்பினார். (வட மொழியைப் பாணினிக்கும் தென் தமிழை அகத்தியர்க்கும் சிவன் தந்ததாகக் கூறுதல் மரபு)

வடமொழி போல் வழக்கற்றுப் போகாமல், என்றைக்கும் நின்று நிலவுகின்ற தென் தமிழைப் பேசி எழுதி வளர்த்துப் புகழ் கொண்ட அகத்தியனை இராமன் வணங்கினான். அகத்தியன் அவனைத் தழுவிக் கொண்டு 'நன்று வரவு' (நல்வரவாகுக) என வாழ்த்தி வரவேற்றான். பாடல்கள்:- (ஆரணிய காண்டம்அகத்தியப் படலம்)

உழக்கும் மறை நாலினும் உயர்ந்து உலகம் ஓதும் வழக்கினும் மதிக் கவியினும் மரபின் நாடி
நிழல் பொலி கணிச்சி மணி நெற்றி உமிழ் செங்கண்
தழல் புரை சுடர்க் கடவுள் தந்த தமிழ் தந்தான்

(41)

நின்றவனை வந்த நெடியோன் அடி பணிந்தான் அன்றவனும் அன்பொடு தழீஇ அழுத கண்ணால் 'நன்று வரவு' என்று பல நல்லுரை பகர்ந்தான் என்றும் உளதென் தமிழ் இயம்பி இசை கொண்டான்

(47)

இந்தப் பாடல்களின்படி நோக்கின், அகத்தியரும் இராமரும் தமிழில் பேசிக்கொண்டிருப்பர் என நுனித்துணர (யூகிக்க) இடம் உண்டு. அதனால்தான் இராமன் தென் சொல் கடந்தான்' எனச் சிறப்பிக்கப் பட்டுள்ளான்.

இங்கே எழக் கூடிய இன்னொரு சிக்கலை அவிழ்ப்பது கடினமே. அதாவது, இராமன் தமிழ் மரபினன்