பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 சுந்தர சண்முகனார்

கங்கைப் படலம்

கருப்பு எந்திரம்

அந்தக் காலத்திலேயே கரும்பு பிழிந்து காய்ச்சும் ஏந்திரம் (பொறி) இருந்துள்ளது. காட்டில் சென்ற போது சீதை கருப்பு (கரும்பு) ஏந்திரம் முதலியன கண்டு சென்றாளாம். பாடல் பகுதி:

கருப்பு ஏந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்
பொருப்பு ஏந்திய தோளானொடு விளையாடினள்,

6

மலையணைய தோள் உடைய இராமனோடு பல காட்சிகளையும் விளையாட்டாகக் கண்டுகொண்டு சீதை சென்றாளாம்.

சொல் மலர்

இராமனை வரவேற்ற தவசியர், கண்ணீரால் நீராட்டினராம்; இன்சொல்லாகிய மலரைச் சூட்டினராம்; அன்பு என்னும் அமிழ்தத்தை ஊட்டினராம்; வழி நடந்து வந்த வருத்தத்தைப் போக்கினராம். பாடல்:

பொழியும் கண்ணின் புதுப்புனல் ஆட்டினர் மொழியும் இன்சொலின் மொய்ம்மலர் சூட்டினர் அழிவில் அன்பெனும் ஆர் அமுது ஊட்டினர்
வழியில் வந்த வருத்தத்தை வீட்டினர்

(14)

சொல்லை மலராகச் சொல்வது இலக்கிய மரபு. பூக்களின் தொகுப்பைப் பூமாலை எனல் போல், சொற்களால் ஆன பாக்களின் தொகுப்பைப் பாமாலை' என்பர். பிறவி வேண்டா- வீடு வேண்டும் என்று கேட்பவர் கேட்பார்களாக! இறைவனே! யான் உன்மேல் 'தமிழ்ச் சொல் மலர்' புனையும் பிறவியையே வேண்டுவன்- என்று சிவப்பிரகாச அடிகளார் சோண சைல மாலை என்னும் நூலில் தெரிவித்துள்ளார்