பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

86 ) சுந்தர சண்முகனார்

அருந்தவம் என் துணை ஆள, இவன் புவி ஆள்வானோ
மருந்தெனின் அன்று உயிர்; வண்புகழ் கொண்டு பின் மாயேனோ?

(18)

என்பது பாடல் பகுதி. உலக வழக்கில், 'உயிர் வெல்லக் கட்டியா என்ன?’ என்று கூறும் வழக்காறு ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மருந்து = தேவாமிழ்தம்!

திருவடி சூட்டு படலம்

தந்தை தாயர்

தான் திரும்ப முடியாது எனப் பரதனிடம் கூறும் இராமன், கேள்வி- ஞானம்- சீலம்- மேன்மை- தேவர் எல்லாம் குரவரே! அந்தக் குரவர்கள் தந்தை தாயரே! எனவே, அவர்தம் கட்டளையை யான் மீறமுடியாது எனக் கூறுகிறான்:

பரவு கேள்வியும் பழுதுஇல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும் உரவிலோய், தொழற்கு உரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால்

(106)

அந்த நற்பெருங் குரவர் ஆர்எனச் சிந்தை தேர்வுறத் தெரிய நோக்கினால் தந்தை தாயர் என்று இவர்கள்தாம் அலால் எந்தை கூற வேறு எவரும் இல்லையால் (107)

இவண், "தந்தை தாய்ப் பேண்', 'அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்', 'தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை', 'தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை' என்னும் முன்னோர் மொழிகள் ஒப்பு நோக்கத் தக்கன.

இவ்வாறு அயோத்தியா காண்டத்தில் சிறப்புறு செய்திகள் பல கூறிக் கம்பர் நம்மை மகிழ்வித்துள்ளார். கல்வியில் பெரியவராயிற்றே கம்பர்!