பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88 - சுந்தர சண்முகனார்

பூவரு பொலன் கழல் பொரு இல் மன்னவன் காவலின் ஆணைசெய் கடவு ளாம்எனத்
தேவரும் முனிவரும் உணரும் தேவர்கள்
மூவரின் நால்வராம் முனிவந்து எய்தினான்

(4)

என்பது பாடல். முனிவர்கட்குள் வசிட்டர் சிறந்தவர் என்பதைச் சிவப்பிரகாசரும் தம் பிரபுலிங்க லீலைகைலாச கதியில் குறிப்பிட்டுள்ளார். கைலையில் கொலு வீற்றிருக்கும் சிவனது அவைக்கு வசிட்டர் முதலான முனிவர்கள் வந்தனர் என வசிட்டனுக்கு முதன்மை கொடுத்துள்ளார் சிவப்பிரகாசர்.

கழியு மாறுமுக் காலமும் உளர்தளை கழன்றார் பழியிலா வதிட்டாதி மாமுனிவரர் பரந்தார்

(38)

என்பது பாடல் பகுதி, வதிட்டர்=வசிட்டர். இந்தக் கடவுளர் மூவரை வைத்து மற்றொருவரைச் சிறப்பிக்கும் பழக்கம் கம்பருக்கு உண்டு. யுத்த காண்டம்- மாயா சீதைப் படலத்தில், முதன்மைக் கடவுளர் மூவர் என எண்ணற்ற பலர் எண்ணுகின்றனர். அனுமனையும் சேர்த்து முதன்மையர் நால்வர் எனக் கூறவேண்டும் என அனுமனைச் சிறப்பித்துள்ளார்:

இறைவர் மூவர் என்பது எண்ணிலார் எண்ணமேதான்
அறைகழல் அனுமனோடும் நால்வரே முதல்வர் அம்மா
(5)

கம்பரின் இந்த முறை ஒரு புது முறையாகத் தோன்றுகின்றதன்றோ?

தம் கருமம்

தயரதன் தான் முடி துறந்து இராமனுக்கு முடிசூட்ட விரும்புகிறேன் என அவையோரிடம் கூறியபோது, 'இது வரை உலக உயிர்கட்கு நல்லன செய்தேன்; இனி என் உயிர்க்கு உறுதி தேட விழைகிறேன்' என்று கூறுகிறான்: