பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90 () சுந்தர சண்முகனார்

என்பது பாடல். "கோல் கொளல்" என்பது சுற்றி வளைத்துத் தேர் ஒட்டுதலைக் குறிக்கிறது. மனத்தை (இழுதை) கழுதை என்றுளார். மனம் ஐம்பொறிகளாகிய ஐந்து தேர்களை ஒட்டுகிறது என்னும் உருவகக் கருத்து, இந்தக் கால அறிவியல் கருத்தோடும் ஒத்திருக்கிறது. மூளையின் இயக்கமே மனம் எனப்படுவது. ஐம்பொறி களின் வாயிலாக, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்னும் ஐந்து புலங்களை மூளையே அறிந்து நுகர்கிறது. எனவே, மனம் என்னும் பேய் ஐம்பொறிகளாகிய ஐந்து தேர்களை ஒட்டுவதாகக் கூறியிருப்பது சாலப் பொருந் தும். மனம் கண்டபடி அலைதலால் அது பேய் எனப் பட்டது.

இனியது போலும்

அரசாள்வது உண்மையில் இனிது அன்று; ஆனால் மேலோடு பார்க்குங்கால் இனியது போலத் தோன்றும்; மற்றபடி இது துன்பமேயாம்- என்பதாகத் தயரதன் கூறுகிறான்:

உள்ளம், இனியது போலும் இவ்வரசை எண்ணுமோ (22)

என்பது பாடல் பகுதி. ஈண்டு, அரசாள்வது துன்பமே எனச் சேரன் செங்குட்டுவன் கூறுவதாகச் சிலப்பதி காரம்- கட்டுரை காதையில் உள்ள பகுதி ஒப்பு நோக்கத் தக்கது.

மழைவளம் கரப்பின் வான்பேர் அச்சம் பிழையுயிர் எய்தின் பெரும்பேர் அச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோல் அஞ்சி மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பம் அல்லது தொழுதகவு இல்... (100-104)

என்பது சிலம்புப் பகுதி.