பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 சுந்தர சண்முகனார்

அளக்கும் முறை

காவல் (போலீசு) துறைக்கும் போர்த்துறைக்கும் தேர்ந்தெடுக்கும் ஆட்களின் உடம்பை அளப்பது வழக்கம். இங்கே, தயரதன், தம் மகன் இராமனுக்கு நாடாளும் உடல் வலிமை இருக்கிறதா என அளக்கிறான். ஏதாவது அளவுக் கருவி கொண்டு அளந்தானா? இல்லை. இராமனைக் கட்டித் தழுவிக்கொண்டு, தன் தோள்களால் இராமனின் தோள்களையும், தனது மார்பால் இராமனது மார்பையும் அளந்தானாம்- இயற்கையாகத் தழுவியதை அளப்பதற்காகத் தழுவியதாகக் கம்பர் தற்குறிப்பேற்றம் செய்துள்ளார். பாடல்:

நலங்கொள் மைந்தனைத் தழுவினன் என்பதென் நனிநீர்
நிலங்கள் தாங்குறு நிலையினை நிலையிட நினைந்தான்
விலங்கல் அன்ன திண்தோளையும் மெய்த்திரு இருக்கும்
அலங்கல் மார்பையும் தனது தோள் மார்புகொண்டு அளந்தான்

(59)

சொல் மறா மக

மறுக்காமல் முடிசூடிக் கொள்ளுமாறு இராமனிடம் தயரதன் கூறுகிறான். அரசரோ- தேவரோ- இந்திரன் போன்றவரோ- தவசியரோ- துன்பம் நீங்கியவர் அல்லர், ஆனால், பெற்றோர் சொல்லை மறுக்காத பிள்ளையைப் பெற்றவரே துன்பம் இல்லாதவராவர்.

மன்னர் வானவர் அல்லர்; மேல் வானவர்க் கரசாம் பொன்னின் வார்கழல் புரந்தரன் போலியர் அல்லர்; பின்னும் மாதவம் தொடங்கி நோன்பு இழைத்தவ ரல்லர்;
சொல் மறா மகப் பெற்றவரே துயர் துறந்தார்

(67)

என்பது பாடல். ஈண்டு, ஏவாமலே குறிப்பறிந்து பணிபுரியும் மக்களே, இறப்பைத் தராத அமிழ்தம் போன்றவராவர் என்னும் கருத்துடைய 'ஏவா மக்கள் முவா மருந்து" என்னும் ஒளவையின் கொன்றை வேந்தன் மொழி (8) ஒப்பு நோக்கத் தக்கது