பக்கம்:அயோத்தியா காண்ட ஆழ்கடல்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அயோத்தியா காண்ட ஆழ் கடல் 97

சூடு கின்றனர் சொல்லுவது ஓர்கிலர்
மாடு சென்றனர் மங்கையர் நால்வரே

(2)

என்பன பாடல்கள். நால்வர் பெண்டிரின் உவகை மிகுதியையும் ஒட்டத்தின் விரைவு மிகுதியையும் இதனினும் இன்னும் எவ்வாறு அணிந்துரைக்க முடியும்? கருத்து வெளியீட்டுச் சிறப்பில் கம்பர் உயர் எல்லைக்குப் போய்விட்டிருக்கிறார்!

முந்து வான்

தயரதனின் வேண்டுகோள்படி, முடிசூட்டலை அறிவிப்பதற்காக, வசிட்டன் இராமன் மாளிகைக்கு மிக்க மகிழ்ச்சியுடன் விரைந்து சென்றானாம்.

முனிவனும், உவகையும் தானும் முந்துவான் மனுகுல நாயகன் வாயில் முன்னினான்

(12)

என்பது பாடல் பகுதி. 'உவகையும் தானும் முந்துவான்' என்ற தொடர் மிகவும் சுவைக்கத் தக்கது. ஒட்டப் பந்தயத்தில், சில நேரங்களில், ஒருவரை ஒருவர் மாறி மாறி முந்திக் கொண்டு ஒடுவது வழக்கம். அதுபோல இங்கே, மகிழ்ச்சியும் தானும் மாறி மாறி முந்திக்கொண்டு விரை கின்றனராம். அதாவது, மிக்க மகிழ்ச்சியோடு விரைந்து சென்றான் என்பது இதன் உட்பொருள்.

நோற்ற தாமரை

கைகேயிக்கு இராமனது முடி சூட்டு பற்றிச் சொல்லக் கூனி சென்று, உறங்கிக் கொண்டிருந்த கைகேயியின் காலைத் தொட்டு எழுப்பினாளாம். முகம், கண், கை, கால் ஆகிய உறுப்புகட்குத் தாமரையை உவமிப்பது இலக்கிய மரபு. கைகேயியின் காலுக்கு ஒப்புமையாவதற்குத் தாமரை தவம் கிடந்ததாம். அத்தகைய காலைத் தொட்டு எழுப்பினாளாம் கூனி.

எய்தி அக்கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரை நோற்ற நோன்பினால்

அ. ஆ.-7