பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/16

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

14

அருள்நெறி முழக்கம்


நாட்டில் தீமைகள்தான் தலைவிரித்தாடும். இந்த உயரிய கொள்கையை உணர்த்தத்தான் கண்ணன் சரிதை நம்மிடம் இருக்கின்றது. கம்சனுக்கும் இரணியனுக்கும் கிடைத்த தண்டனை நமக்கெல்லாம் கிடைக்கும் முன்னர் நாமெல்லாம் நல்லவர்களாக வாழ வேண்டும். நம்மால் இயன்ற நன்மைகளை நாட்டிற்குச் செய்ய வேண்டும். நன்மை செய்ய முடியாவிட்டால் தீமையாவது செய்யாதிருப்பது நல்லது. இல்லையேல் மனித சமுதாயம் கண்ணனின் தண்டனையின்றும் தப்பமுடியாது.

தமிழ்நாட்டு வரலாற்று ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால் தமிழனம் உயர்ந்த கொள்கைகளைத்தான் ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வந்திருக்கின்றது என்பது நன்கு தெரிய வருகின்றது. தமிழ்நாட்டில் எந்தக் கொள்கையும் மக்களின் வாழ்வோடு கலந்து ஒன்றி இருந்தால்தான் மக்கள் சமுதாயத்தில் இவைகளுக்கு மதிப்பும் தகுதியும் கொடுக்கப்படும். இப்படிப்பட்ட கொள்கைகள்தான் நாட்டிற்கும் இந்நாட்டில் வாழ்கின்ற மக்களுக்கும் நலம்பல பயக்கும். இந்த உயரிய கருத்துக்களைப் பண்டைய மக்களின் வாழ்க்கை வரலாறு நன்கு உணர்த்துகின்றது. மக்களின் வாழ்வோடு வாழ்வாக ஒன்றிக் கலந்து நின்று நலம்பல பயக்கின்ற கொள்கைகள்தான் இன்றைய நாட்டிற்குத் தேவை. வாழ்வோடு - கலக்கப்படாத எந்தக் கொள்கையும் தமிழ்நாட்டு மக்கள் ஏற்கமாட்டார்கள். ஆகையால்தான் விண்ணவர்களும் காணமுடியாத அந்த உயரிய பரம்பொருளை மண்ணகத்தே காட்டினார்கள். ஏன் அப்படிச் செய்தார்கள் என்றால் வாழ்விலே தொடர்ந்து நின்று துன்பத்தை அறிந்தும் அனுபவித்திருந்தும் இன்பம் கொடுக்கக்கூடிய பொருளாக இருந்ததால்தான் அவர்கள் அவ்வாறு செய்தார்கள். இதுதான் தமிழகத்தின் கடவுள் தத்துவம். எனவே, தமிழகத்து மக்கள் கடவுளோடு கடவுளாகவும், தமிழகத்துக் கடவுள் மக்களோடு மக்களாகவும் ஒன்றிக் கலந்திருப்பது நன்கு தெரிகின்றது.