பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

21

அருள்நெறி முழக்கம்


வழிபடுவது போற்றத்தக்கது; வரவேற்கத்தக்கது. அதேநேரத்தில் கண்ணன் காட்டிய வழியைப் பின்பற்றி நடக்கவேண்டும். பின்பற்றி நடக்காமல் வேற்று வழிகளில் சென்றால் அவன் நாமத்தைச் சொல்லி அவன் திருஉருவத்தை வழிபடுவதில் பயன் இல்லை. நீங்கள் எல்லோரும் தொண்டுள்ளம் படைத்தவர்களாக பொது நலப்பணியை மேற்கொண்ட தொண்டர்களாக வாழ வேண்டும். எளியார்க்குச் சேவை செய்வதுதான் கண்ணனுக்குச் செய்யும் தொண்டு. அந்த உயரிய வழியில் மனத்தைப் பழக்கி அதன் வழியில் உறுதியாகச் செலுத்த வேண்டும். எல்லோரும் பாண்டவர்களைப் போலப் பக்தியை வளர்க்க வேண்டும். ஒவ்வொரு சமயப் பற்றுடையவனும் தான் சமயப்பற்றுடையவனாக இருத்தல் மட்டும் போதாது. தன்னைச் சுற்றி வாழ்கின்ற மக்களையும் சமயப் பற்றுடையவர்களாக - பிரார்த்தனையைப் பின்பற்றுகிறவர்களாக - பக்தியுள்ளவர்களாகச் செய்ய வேண்டும். இதுதான் வாழ்வின் கடமை என்று ஒவ்வொரு தமிழனும் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும். பக்தியுடையவர்களுக்குத் தான் இனித்தமுடைய பொற்பாதம் கிடைக்கும். அவர்களின் வாழ்வுதான் நன்கு அமையும்; இன்பம் பெருகும். சமயப்பற்று இல்லாதவனுக்கு இனி இந்த நாட்டில் வாழ உரிமை கிடையாது என்ற சூழ்நிலையை உண்டாக்க வேண்டும்.

எல்லோரும் பிரார்த்தனையின் துணைகொண்டு அன்பும் அறமும் உடையவர்களாக வாழ்வோமாக. மக்கட் குலம் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்க! உங்கள் அனைவரின் தொண்டுள்ளமும் பரிபூரண சேவையும் நாட்டுக்கு நலம்பல தருவதாகுக.


மதுரை நவநீதக் கண்ணன் பஜனைக் கூட

8 ஆம் ஆண்டு விழாவில்

தவத்திரு அடிகளார் நிகழ்த்திய தலைமையுரை