பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

55

அருள்நெறி முழக்கம்


தனித்ததொரு சிறப்பில்லை. ஏனென்றால் தமிழ்த்தாயை வாழ்த்துகின்ற பாக்கள் - தமிழறிஞர்களை, தமிழ்ப் புலவர்களைப் பாராட்டுகின்ற பாக்கள் - தமிழில் இருப்பது போல வேறெந்த மொழியிலும் காண முடியவில்லை. தமிழைத் தாயென்றெண்ணித் தெய்வமென்று உளமார வாழ்த்தி வணங்கி வழிபட்டவன் தமிழன்.

தமிழ்நாட்டில்தான் இம்முறை தொன்று தொட்டு இருந்திருக்கின்றது. உலகினை ஒரு கொடியின்கீழ் ஆட்சி செலுத்திய ஆங்கில நாட்டிற்கூட இத்தகு பண்பாடு இருந்ததில்லை. இதிலிருந்து நமது முன்னோர்கள் அழுத்தமான தமிழ்ப் பற்றுக் கொண்டிருக்கிறார்களென்று தெரிந்து கொள்ள முடிகின்றது. அவர்கள் ஆக்கித் தந்த தமிழிலக்கியங்கள் அருள் நெறியில் அமைந்துள்ளன. பிற மொழிகளில் அவ்வாறில்லை.

கடவுள் தன்மைக்கு மாறுபட்ட எதிரான கருத்துக்கள் நமது நாட்டிலே தோன்றியிருப்பதை மக்கள் எல்லோரும் நன்கு அறிந்திருக்க முடியும். ஏனெனில் இன்றையத் தமிழகம் தமிழ் மொழியினை முற்றிலும் உணரவில்லை. வேற்று நாட்டவரின் நுழைவால் தமிழர்கள் தங்கள் மொழிப்பற்றை இழந்து விட்டார்கள். தமிழர்களின் தளர்ந்த நிலையைப் பயன்படுத்திக் கொண்டு வேற்று நாட்டவர்கள் தங்கள் மொழிச் சொற்களை இங்குப் புகுத்தினார்கள். இன்று தமிழர்கள் தங்கள் மொழியென்று சொல்லக்கூடிய அளவிற்கு வேற்றுமொழிகள் நம் நாட்டில் இடம் பெற்றுவிட்டன. இளைஞர்கள் ஏனைய மொழிகளைக் கற்றுக் கொள்வதால் தவறு ஒன்றுமில்லை. ஆனால் அதே நேரத்தில் தமிழகத்தின் தேசிய மொழியாகத் தமிழ்மொழிதான் இருத்தல் வேண்டும். தமிழ்மொழி அரசின் மொழியாக ஆதல் வேண்டும்.

நல்ல தூய தமிழ்மொழியில் எழுதினாலும் பேசினாலும் அதை இன்று பல தமிழர்கள் வரவேற்கவில்லை. தமிழ்மொழியில் பேசுவது கூட இன்று அரிதாகி விட்டது. தமிழர் தமிழ் மொழியினைக் கருத்திற்கொண்டு அதன் வளர்ச்சியிலேயே கண்ணோட்டம் கொண்டு நல்ல தூய தமிழில் பேசவும் எழுதவும்