பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/73

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

71

அருள்நெறி முழக்கம்


பெயரை வைத்துத் தீமையை உணர்த்துகின்றாரே தவிரத் தீமையை நாவால் சொல்ல முன்வரவில்லை. இந்தநிலையிலே, பண்டைத் தமிழ் இலக்கியங்களைப் பார்த்தல் வேண்டும்.

இன்று வருகின்ற இலக்கியங்களைப் பற்றிச் சிந்திப்போம். பழம்பெரும் இலக்கியங்கள் எப்படித் தோன்றின? தமிழ்நாட்டு இலக்கியங்கள் அனைத்தும் சிறந்த அறத்தை அடிப்படையாகக் கொண்டு தோன்றின. தமிழன் என்று அறிவுடன் உலவத் தொடங்கினானோ அன்றே காதலொடு வாழ்ந்தான். தலைவனும் தலைவியும் இக்காலத்துத் தலைவன், தலைவிபோல் காட்சியளிக்கமாட்டார்கள். அடிப்படை வாழ்க்கை முறையிலேயே இருக்கும். அகநானூறு, கலித்தொகை, குறுந்தொகை எல்லாம் அகத்துறை இலக்கியங்கள். அவைகளைப் படித்துப் பார்க்க வேண்டும். எளிமையான முறையில் நல்லன சொல்லிய பெருமை நமது புலவர்களுக்குண்டு.

நீங்கள் திருவள்ளுவரை இலட்சிய புருடராகக் கொள்ளுங்கள். திருவள்ளுவர் இந்த நாட்டிலே அன்பு நிலவ வேண்டும் என்பதற்காக வேறெந்த எண்ணமும் கொள்ளாது ஒப்பற்ற எண்ணங்களைக் கொடுத்தார். திருவள்ளுவர் தொடங்குகின்றபோதே அறத்தை வலியுறுத்துகின்றார். அறம்தான் மனிதனை முன்னேற்றும் என்று சொல்லுகின்றார். அறத்திற்கு அடிப்படைக் குணம்தான் அன்பு என்பதை எல்லோரும் உணர்ந்து வாழவேண்டும். உள்ளத்தில் தூய்மை நிலவவேண்டும் என்றெண்ணி,

“மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"

என்று பாடிய பெருமை வேறு எந்த இலக்கிய ஆசிரியருக்கும் இல்லை. தனிப்பட்ட மனிதனிடத்திலே அறத்தை வைத்துப் பேசிய பெருமை திருவள்ளுவருக்குத்தான் உண்டு. அதனை உணர்ந்து நடவாததால்தான் நாடு வறுமைப்படுகின்றது. வள்ளுவர் கூறிய அறம் இந்த நாட்டில் வளருமானால் இன்பம் பெருகும்.