பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/75

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

78

அருள்நெறி முழக்கம்


இதனை எண்ணித்தானோ என்னவோ நஞ்சுண்டு இறந்துவிட்டால். பிறர்க்கு இழிசொல் கிடைக்கும் என்று எண்ணி இறப்பு வாராதிருக்க வேண்டும் என்று எண்ணி இருப்பார் போலும்.

எப்பொழுதுமே தமிழன் கண்ட அறம் உயர்ந்த அறம். பிறரைச் செய் என்று சொல்ல மாட்டார்கள். செய்தால் நல்லது என்று சொல்லுவார்கள். நல்லது செய் அல்லது தீமையைச் செய்யாமலிரு என்று சொல்லுவது இந்த நாட்டுப் பண்பாடு. இதுதான் இன்று கிராமத்துப் பழமொழியாக விளங்குகின்றது. நரி வலம் போனாலும் சரி, இடம் போனாலும் சரி மேலே விழுந்து கடிக்காமல் இருந்தால் போதும் என்று சொல்லுவார்கள்.

எதிலும் நம்பிக்கை வேண்டும். நமக்குத் தெரிந்தவரையில் எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் நம்பிக்கை நம்பிக்கை என்றுதான் அவர்கள் எல்லாம் மூச்சு விடுகின்றனர். நம்பிக்கை ஒன்றுதான் முதுமைக்காலத்தில் தாதியாய் நின்று துணை செய்யும்.

நான் தமிழன் என்று பூதத்தாழ்வார் சொல்லுகின்றார். வெறும் தமிழன் என்று கூறிலர். பெரும் தமிழன் என்று சொல்லுகின்றார்.

"யானே தவம்செய்தேன் ஏழ்பிறப்பு மெப்பொழுதும்
யானே தவமுடையேன் எம்பெருமான் - யானே
இருந்தமிழ் நன்மாலை யிணையடிக்கே சொன்னேன்
பெருந்தமிழன் நல்லேன் பெரிது"

பெரிய தமிழன் - நல்ல தமிழன் என்று பூதத்தார் புகல்கின்றார். இத்தகைய நெறியில் வாழ்ந்த மக்களைக் கண்ட பெருமக்கள் அதற்கு மாறுபட்ட நெறியிலே வாழ்கின்றவர்களைக் கண்டபொழுது கோபப்படுதல் இயற்கைதானே!

இத்தகைய இலக்கியங்களை ஆக்குவது என்பது முடியாததொன்று. மனச்சுருள் நீக்கி மலர்விக்கும் இத்தமிழ்