பக்கம்:அருள்நெறி முழக்கம்.pdf/84

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தவத்திரு குன்றக்குடி அடிகளார்

82

அருள்நெறி முழக்கம்


 "வினையே ஆடவர்க்கு உயிரே" என்ற தத்துவ வழிநின்று, உழைப்பால் தமிழகத்தை செல்வங்கொழிக்கும் திருநாடாக ஆக்குதல் வேண்டும். தமிழகத்து மக்கள் அனைவரும், பண்டைத் தமிழ் இலக்கியங்கள் காட்டும் நல்லற நெறிகளைத் தெரிந்து கொண்டு, வாழ்க்கையில் அமைத்துக் கொள்ள வேண்டுவன எல்லாம் செய்ய வேண்டும். அதாவது, நகரங்களிலும், கிராமங்களிலும், நல்ல தொண்டர்களைக் கொண்டு, தமிழ் நாகரிக வாழ்க்கையினைப் பரப்பி வளர்க்க வேண்டும்.

கலை, கலைக்காக என்னும் கொள்கை தமிழர்க்கு உடன்பாடற்றது. கலை வாழ்க்கைக்கே என்பது தமிழர் கொள்கை. ஆதலால், இன்பத் தமிழிலக்கியங்கள்காட்டுகின்ற ஒப்பற்ற அறப்பெருவாழ்வு நெறியில் வாழ்வோமாக, தமிழர் தன் மொழியை வளர்க்கும் முயற்சியில் ஈடுபடுகின்றபொழுது, குறுகிய நோக்கத்தில் தளைப்படா வண்ணம், பிறமொழிகளையும் பேணி, அவற்றின் பண்புகளையும் தழுவிக் கைக் கொண்டு தன் மொழி வளர்ச்சிக்குப் பயன்படுத்துவார்களாக.

அதுபோலவே, சமுதாய உணர்ச்சியோடு, உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தாராகக் கருதிப் பேரன்பு செய்வார்களாக.

தொகுப்புரை

இதுவரையில் இனிமை நலம் மிகப் பெற்றும் இலக்கிய வளம் நிறையப்பெற்றும் சிறந்து விளங்குகிறது. செந்தமிழ் மொழி என்பதையும், மக்களை அன்பு நெறியிலும், அறநெறியிலும் அழைத்துச் சென்று இன்பம் பயக்கின்ற திறமுடையனவே நல்ல இலக்கியங்கள் என்பதையும், தமிழ் இலக்கியங்கள் பரந்துபட்ட விரிந்த மனப்பான்மையையும், அமைதியும், இன்பமும் அளிக்கக் கூடிய நெறிமுறைகளையும், இன்னா செய்தார்க்கும் இனியவே செய்யும் பண்பாட்டினையும் கூறி விளக்கி, ஒழுக்கத்திற்கும், நல்லின்பத்திற்கும் பெருந்துணையாக இருக்கும் சமய