பக்கம்:அறவோர் மு. வ.pdf/21

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
18
அறவோர் மு. வ.
 

"மற்றவர்களைக் கெடுத்துத் தான் வாழ வேண்டும் என்பதுதான் கெட்ட தன்னலம். மற்றவர்களும் வாழத் தானும் வாழ வேண்டும் என்பது நல்ல தன்னலம். தனக்கு மட்டும் நல்ல காலம் வரவேண்டும் என்பது கெட்டது. நாட்டுக்கே நல்ல காலம் வரும் என்பது நல்லது. அதனால்தான் மூடநம்பிக்கைகளை நான் வெறுக்கிறேன்."

-அகல் விளக்கு, பக். 207

புதிய உலகம்

இவ்வாறாக உலகில் உள்ள குறைகளைக் கூறி அவற்றை நிறைவாக்குவதற்கு உரிய முறைகளைக் கூறுவதோடு மட்டும் நின்றுவிடவில்லை. ஒரு புதிய உலகம் காணவும் விழைகின்றது அவர் உள்ளம்.

வண்மை இல்லைஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லைநேர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லைபொய் உரைஇ லாமையால்
ஒண்மை இல்லைபல் கேள்வி ஓங்கலால்.

- கம்ப; பால: நாட்டுப் படலம்: 53

இது கம்பன் காண விழைந்த புதிய உலகம். டாக்டர் மு. வ. அவர்கள் காண விழைந்த உலகம் பொருட் போராட்டம் இல்லாத உலகம். பணவேட்டை இல்லாத ஓர் அமைப்பையே விரும்பினார்.

"பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்னும் நிலைமை போகவேண்டும். பொருள் பற்றிய பூசல் உலக அமைப்பில் இருக்கக் கூடாது. பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை என்று மாறிய நிலை வந்துவிட வேண்டும்."

-அன்னைக்கு, பக். 26
“இதுவரை இருந்த உலக அமைப்பு வேறு. இனிவரப்போகும் புத்துலக அமைப்பு வேறு. பழைய உலகத்தில் பொதுமக்கள் பொருளாதாரப் போராட்டத்தில்
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/21&oldid=1236310" இருந்து மீள்விக்கப்பட்டது