பக்கம்:அறவோர் மு. வ.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அறவோர் மு. வ.

கட்டாயக் கல்வி, கட்டாய இராணுவம் என்று என்னென்னவோ இருக்கின்றன. ஆனால் கட்டாய உணவு, கட்டாயக் குடும்பம், கட்டாய உடை, கட்டாய வீடு, கட்டாயப் பொழுது போக்கு, கட்டாய உழைப்பு என்ற அமைப்புகள் வரவில்லை. அதனால்தான் எப்படியாவது வாழ வேண்டும் என்ற கவலை ஒவ்வொருவரையும் வாட்டுகிறது. எப்படியும் வாழ முடியும் என்ற நம்பிக்கை உள்ள சமுதாயமாக அமைக்க வேண்டும்" (கயமை, பக். 105-106) என்று கூறுகின்றார். இன்னனம் சமுதாயத்தில் புதிய மாறுதலை ஏற்படுத்த விரும்பும் அவர் அச்சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள் என்ன என்பதையும் கூறிச் செல்கின்றார். சமுதாய வளர்ச்சிக்குத் தூய அன்பு, அறிவின் தெளிவு, தூய உடல் ஆகிய மூன்றும் இருந்தால் போதும் என்று மொழிகின்றார்.

"சமுதாயம் நன்கு வளர்வதற்கு உண்மையான அன்பு வேண்டும். தூய உடல் வேண்டும்; அறிவின் தெளிவு வேண்டும். இந்த மூன்றும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் ஈடுபட்டால் எதிர்காலத்தில் போட்டியும் குழப்பமும் ஆரவாரமும் இல்லாமல் மக்கள் அமைதி யாகவும் இன்பமாகவும் வாழ முடியும்."
-வாடா மலர், பக். 231

சமுதாய வளர்ச்சிக்குத் தேவைப்படும் இம்மூன்றன் தன்மைகளையும் கூட டாக்டர் மு. வ. விளக்கிச் செல்கின்றார். அன்பின் தேவையை,

"இந்த உலகத்தில் பொருள் இல்லாமல் வாழ்ந்தாலும் வாழலாம். அன்பு செலுத்தும் உயிர் இல்லாமல் வாழக்கூடாது"

என்பதனால் உணர்த்துகின்றார்.

"அன்பு வாழ்வை இயக்கும் பெருஞ்சக்தி. எவ்வளவு தடைகளையும் கடந்து வெல்லும் ஆற்றல் அன்புக்கு உண்டு"
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/27&oldid=1234756" இலிருந்து மீள்விக்கப்பட்டது