பக்கம்:அறவோர் மு. வ.pdf/35

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

அறவோர் மு. வ.

"கூர்த்த அறிவெல்லாம் கொள்ளை போக வேண்டும் என்று தாயுமானவர் சொன்னது கடவுளன்பரின் வாழ்க்கைக்கு மட்டும் அல்ல, காதலர் வாழ்க்கைக்கும் முழுவதும் பொருந்தும்."
- கள்ளோ காவியமோ, பக், 88
"உண்மையும் நேர்மையும் மட்டும் இருந்தால் குடும்பத்துக்குப் போதுமா? அவற்றால் மனங்களைப் பிணிக்க முடியாது. அன்பும் நயமும்தான் மனங்களைச் சேர்க்கும் ஆற்றல் உள்ளவை."
-அகல் விளக்கு, பக். 361

திட்டமிட்டு வாழும் வாழ்க்கையில் பொருள் வறுமைக்கு இடம் ஏற்படலாம். ஆனால் அன்பும் எளிமையும் நிறைந்த வாழ்வில் இன்பத்திற்குக் குறைவிருக்காது என்பது மு.வ. அவர்கள் தெளிந்த உண்மை. இதனை,

"என் சின்ன உலகத்தில் வீண்பேச்சு இல்லை. போலி உறவு இல்லை. உதடுகள் அசைந்தால் உள்ளமும் அசைகின்ற உலகம் எங்கள் உலகம். கண்ணீர் கலங்கினால் கருத்தும் கலங்குகின்ற உலகம் எங்கள் உலகம். போதும் எனக்கு இந்தச் சின்ன உலகம். இங்கே என் வாழ்க்கைக்கு வேண்டிய ஆறுதல் உள்ளது. இன்பம் உள்ளது. என் கூடு அவள் வாழும் குடிசை. விட்டுப் பறந்தால் இருவரும் ஒன்றாகவே பறப்போம். புகுந்தால் ஒன்றாகவே புகுவோம். சின்னக் கூடுதான். ஆனால் சமுதாயத்தின் மதிப்பு மானம் என்னும் தட்பவெப்பக் கொடுமைகள் தாக்காத வலிய அரண் இது. போதும் எனக்கு இது."
-கரித்துண்டு, பக். 207

என்னும் மோகன் பொன்னியோடு வாழ்ந்த வாழ்க்கையைக் கொண்டு புலப்படுத்துகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/35&oldid=1234827" இலிருந்து மீள்விக்கப்பட்டது