பக்கம்:அறவோர் மு. வ.pdf/37

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

34

அறவோர் மு. வ.

கணவன்-மனைவி இருவரும் இணைந்து பிணைந்து நடாத்தும் அன்பு வாழ்க்கையில் படிக்கவேண்டிய முதல் பாடமும் முடிவுப் பாடமும் விட்டுக் கொடுப்பதே என்பதனை,

"எவ்வளவு அறிவு இருந்தாலும் போரும் பிணக்கும் வளருமே தவிர, அன்பும் அமைதியும் வளர முடியாது. அதனால் கணவனும் மனைவியும் கற்கவேண்டிய முதல் பாடம் விட்டுக் கொடுப்பதுதான். அதுவே கடைசிப் பாடமும் ஆகும்."
-கள்ளோ காவியமோ, பக். 101

எனக் கள்ளோ காவியமோ நாவலில் முருகய்யா என்ற அறவோர் வாய்மொழி வழி தெளிவிக்கின்றார். விட்டுக் கொடுத்தலோடு பொறுமையும் அவசியம் என்பதை அகல் விளக்கில் சுட்டுகின்றார்.

"பொறுமையும் விட்டுக் கொடுத்தலும் இல்லாவிட்டால் ஒரு பயனும் இல்லை. காதல் காதல் என்று ஒரே நிலையில் நின்று திருமணம் செய்து கொள்கிறார்களே அவர்களுக்கும் இந்தப் பொறுமையும் வேண்டும்,

விட்டுக் கொடுத்தலும் வேண்டும்.”
-அகல் விளக்கு, பக். 291

வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தவரே வென்றவர் என்பதைத் தங்கைக்கு அறிவிக்கின்றார்.

"வலியப்பேசி விட்டுக் கொடுத்தவர் தோற்றுவிட்டவர் அல்ல. அவர்தான் அன்பு வாழ்க்கையில் வெற்றி பெற்றவர் என்கின்றார் திருவள்ளுவர். ஊடலில் தோற்றவர் வென்றவர் என்னும் அவருடைய கருத்து எவ்வளவு உயர்ந்த பண்பாட்டின் அடிப்படையாகப் பிறந்திருக்கிறது!”
-தங்கைக்கு, பக். 36
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/37&oldid=1234829" இலிருந்து மீள்விக்கப்பட்டது