பக்கம்:அறவோர் மு. வ.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

41

அவனுக்கு இணங்கி நடப்பது தீமை என்றால் அப்போது அந்தத் தீமையை ஒழித்து அதை நன்மையாக்க வேண்டும் என்று உரிமை கொடுக்கின்றார்.

"அதாவது உள்ளம் அறிந்தொழுகும்போது ஒரு துறையில் கணவன் விருப்பத்திற்கு முற்றிலும் இணங்கி நடப்பது குடும்பத்திற்குத் தீமையாக இருந்தால் அப்போது இந்த அறிவுரையைக் கடந்து வாழ வேண்டும். கணவனுக்குக் கத்தரிக்காய் விருப்பம் என்றால் அதையே கறியாக்கலாம். ஆனால் அதுவே அவருடைய உடல் நலத்திற்கு ஆகாததாக இருந்தால் என்ன செய்வது? கிண்டி விளையாட்டால் உள்ளதை எல்லாம் இழந்து ஒட்டாண்டியாகிக் குடும்பம் அழிவதை விட அவருடைய மனத்தை மகிழ்விக்காமல் நின்று வெறுப்பைத் தேடிக் கொள்வதே நல்லது அல்லவா? அப்போதும் அவரைக் கிண்டிக்கும் அனுப்பாதபடி அன்பால் அவர் மனத்தை மாற்றுதல் நல்லது. முடியாதபோது அவருடைய வெறுப்பை வரவேற்றுக் குடும்பத்தைக் காப்பாற்றுவது கடமை அல்லவா? இல்வாழ்க்கைக்காகப் பொறுமை. ஆனால் அந்தப் பொறுமையால் இல்வாழ்க்கை கெடுவதானால்? உடம்புக்காக உணவு. அந்த உணவால் உடம்பு அழிவதனால் பட்டினியைப் போற்ற வேண்டாமா?”
-தங்கைக்கு, பக். 65-66

என்று தங்கையிடம் கேட்கின்றார். திருத்தப்பட வேண்டியவராக அல்லாமல் நல்லவராகவும், வல்லவராகவும் அமைந்து விட்டால்,

"மனைவி மூளைக்கே வேலை கொடுக்காமல் கண்ணை மூடிக்கொண்டு அவரைப் பின்பற்றி நடக்கலாம்"
- அகல் விளக்கு, பக்.296

என்று அச்சமற்ற வாழ்க்கைக்கு வழிவகுக்கின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/44&oldid=1209843" இலிருந்து மீள்விக்கப்பட்டது