பக்கம்:அறவோர் மு. வ.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

55

என்று தொழிலாளிக்குக் கூறுபவர் வாழ்வதற்குரிய வகையினையும் வகுத்துக் காட்டுகின்றார்.

"குறை இல்லாதவர்கள் உலகத்தில் இல்லை. குறைகளுக்கு இடையே குணத்தைக் கண்டு வாழ வேண்டும். முள்ளுக்கு இடையே, முரட்டு இலைகளுக்கு இடையே மெல்லிய மலரைக் கண்டு தேனைத் தேடுகிறது தேனீ! அதுதான் வாழ வழி.
- மண்குடிசை, பக். 95

வாழ்க்கையில் நல்லவர்களாகப் பிறந்தவர்கள் கெட்டவர்களாக ஆக முயற்சி செய்தால் வெற்றி கிடைக்காது என்றும், தமக்குத் துன்பம் செய்தவர்க்கும் நன்மையே செய்ய வேண்டும் என்றும் எண்ணம் கொண்ட மு. வ. அவர்கள்,

"பொய்யர்களாய்த் துன்பப்படாதீர்கள். வஞ்சகர்களாய்த் துன்பப்படாதீர்கள். லஞ்சத்தை ஒழித்து நேர்மையைப் போற்றுங்கள். செருக்கு உடையவர்களுக்கு அஞ்சாதீர்கள். பொல்லாதவனை நல்லவன் என்று புகழாதீர்கள். பொய்யன் மெய்யன் என்று போற்றாதீர்கள். இந்தப் பொய்வாழ்வு உங்களைத் துன்புறுத்தும். ஒழுக்கம் இல்லாதவனுக்கும் பயப்படாதீர்கள். அவனுக்கு உயர்வு தந்து பாராட்டாதீர்கள். உண்மைக்கு மாறாக வாய் திறக்காதீர்கள்"
-மண்குடிசை, பக். 368

என்றெல்லாம் பல்வேறு கருத்துரைகளைக் கூறுகின்றார். இன்னும் தனிவாழ்க்கையில் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்க வேண்டிய கொள்கைகளை - கருத்துகளைப் பல்வேறு வகையாக உரைக்கின்றார் அவர்.

கடவுள் கொள்கை

டாக்டர் மு. வ. அவர்கள் கடவுள் கொள்கை உடையவர். வழிபாட்டால் பயன் உண்டு என்று கருதுகின்றவர். அந்தப் பயன் என்ன என்பதை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/58&oldid=1209944" இலிருந்து மீள்விக்கப்பட்டது