பக்கம்:அறவோர் மு. வ.pdf/69

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அறவோர் மு. வ.

இத்தகைய சீர்கேட்டிற்குச் சமுதாய அமைப்புநிலை காரணமாகிறது. சமுதாயத்தில் காணப்படும் குறைபாடுகள் அனைத்திற்கும் அனைவருமே காரணமாக அமைகின்றனர். இத்தகைய சமுதாயச் சூழலில் உருவாகின்ற எழுத்தாளர்களுள் முரண்பாடுகளுக்கு நியாயங்கள் வழங்குவோரும் உண்டு; எதிர்ப்போரும் உண்டு. முன்னவர் சூழல் நிலைக்கு அடிமைப்பட்டவர். பின்னவர் மனிதத்துவக் கண்ணோட்டம் உள்ளவர். டாக்டர் மு. வ. வின் சமுதாய நோக்கம் மானுடம் வாய்ந்தது. எனவேதாம், அவர்தம் நாவல்கள் அனைத்தும், சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கிய பார்வையின் வார்ப்புகளாகவே உள்ளன. சமுதாயம் நன்கு வளர்வதற்கு உண்மையான அன்பு வேண்டும். துாய உடல் வேண்டும். அறிவின் தெளிவு வேண்டும். இந்த மூன்றும் ஒவ்வொருவரும் பெறும் வகையில் பாடுபட்டால், எதிர்காலத்தில் போட்டியும் குழப்பமும் ஆரவாரமும் இல்லாமல் மக்கள் அமைதியாகவும் இன்பமாகவும் வாழ முடியும். இதுவே எதிர்காலச் சமுதாயத்திற்கு வேண்டிய கால்கோள் (வாடாமலர், ப. 231) என்று தம் வாடாமலரிலே குறிப்பிட்டுள்ள கருத்து டாக்டர் மு. வ. வின் இலட்சியமிக்க சமுதாயத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. ஆனால் இன்றைய சமுதாயச் சூழல், சீர்கேடுகள் நிறைந்து சுயநலம், சூழ்ச்சி, சுரண்டல் தன்மை கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவரையொருவர் ஆளுகின்ற மனப்போக்கு நிறைந்ததாகத்தான் அமைந்துள்ளதே தவிர, ஒருவரையொருவர் ஒன்றிச் செல்கின்ற மனிதத்துவக் கண்ணோட்டம் நிறைந்ததாக இல்லை. சமுதாயத்தில் காணப்படும் மரபுவழிச் சிந்தனைகளும், பண்பாட்டு வழக்கங்களும் மனிதவாழ்வை அடிமை கொள்ளுகின்றன. ஆண், பெண்ணை ஏய்த்துப் பிழைப்பதும், உடைமையாளர்கள் உழைப்பாளர்களைச் சுரண்டுவதும் அரசியல்வாதிகள் மக்களின் மறதியைப் பயன்படுத்துவதும், ஆட்சியாளர்கள் அறியாத மக்களை ஏமாற்றுவதும் இத்தகைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/69&oldid=1210077" இலிருந்து மீள்விக்கப்பட்டது