பக்கம்:அறவோர் மு. வ.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

அறவோர் மு. வ.

என் இரத்தத்திலிருந்தும் உயிர்மூச்சிலிருந்து இதயத் துடிப்பிலிருந்தும் பிறந்தவர்கள் அவர்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் என்னைவிட உயர்ந்தவர்கள், மண்ணின் தெருப்புழுதியில் அலைந்து திரியும் என் உணர்ச்சிகள் என்னிலும் உயர்ந்த விண்ணை நோக்கிப் பிறந்த வேளைகளில் என்னிடமிருந்து பிறந்தவர்கள் அவர்கள்". (கதைக்கலை, ப. 111)

உணர்ச்சியின் துடிப்பிலிருந்து பிறந்து வாழ்க்கையைப் பிரதிநிதித்துவப் படுத்தும் பாத்திரங்களே ஒரு படைப்பிற்கு அமரத்தன்மையைத் தருகின்றன.

கருப்பொருளையோ, பாத்திரப் படைப்பையோ தலைமை நோக்கம் ஆக்கி நாவல் புனைவது இயல்பு. கருப்பொருளுக்கேற்பப் பாத்திரங்களைப் படைத்து நிகழ்ச்சிப் பின்னலை உருவாக்கிக் கலைத்திறன் காட்டுவோர் சிலர்; கருப்பொருளின் மையத்தில் பாத்திரங்களைத் தோற்றப் பொலிவோடு சித்திரிப்போர் சிலர்; இத்தகைய நெறியினருள் நாவல்களில் பாத்திரங்களையெல்லாம் தம் கருத்துகளில் எதிரொலிகளாகப் படைப்போரும் உளர். கலைஞன் என்பவன், வாழ்க்கையின் போராட்டத்தை எடுத்துரைப்பவன் மட்டுமல்லன்; போராட்டத்திற்குத் தீர்வு காணுபவனும் அவனே என்ற கோட்பாட்டினரான டாக்டர் மு. வ., தம் பாத்திரங்களைச் சமுதாயச் சிக்கல்களின் உயிர்த் துடிப்புகளாக, உணர்ச்சிகளின் வார்ப்புகளாக ஆக்கியுள்ளார். மு. வ. தம் நாவல்களில் பாத்திரங்களைப் படைத்துள்ளார் என்று கூறுவதை விட, சமுதாய மாந்தர்களையே படிப்பாளரின் சிந்தனை மேட்டில் நிழலாடச் செய்துள்ளார் எனலாம்.

"அறச்சிந்தனையின் அல்லது சமுதாயச் சிந்தனையின் வார்ப்பாக நடப்பியல் நாவல்களில் பாத்திரங்கள் படைக்கப் பெற்றிருக்குமானால் அது பொருள் பொதிந்ததாகும்" என்பார் இராபர்ட் ஸ்கோவஸ். டாக்டர் மு. வ. தம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/79&oldid=1211411" இலிருந்து மீள்விக்கப்பட்டது