பக்கம்:அறவோர் மு. வ.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்

77

நாவல்களில் அறவாழி, கமலக்கண்ணர், முருகையா, மெய்கண்டார் போன்ற பாத்திரங்களைச் சிந்தனை முகவர்களாகப் படைத்துள்ளார் என்பது உண்மை. ஆனால் டாக்டர் மு. வ. வின் பாத்திரங்கள் எல்லாம் கருத்துகளின் முகவர்கள்தாம் என்று கூறிவிட முடியாது. மு. வ. வின் நாவல்களில் நடமாட விட்டிருக்கும் பாத்திரங்கள் எல்லாம், எலும்பும், தசையும் கொண்டவை மட்டுமல்ல; உணர்ச்சியும் இணைந்த உயிரோவியங்கள் என்பதை ஆழ்ந்து நோக்குவோர் அரிதின் உணர்வர். இன்றைய சமுதாயம் பொருளியல் நிலையிலோ, பாலியல் நிலையிலோ ஏற்படுகின்ற குறையை அளந்து வைத்து ஒருவரையொருவர் வஞ்சித்து வாழும் போக்கில் அமைந்துள்ளது என்பதை நன்குணர்ந்த மு. வ. வஞ்சப் பாத்திரங்களையும் படைத்துச் சமுதாயச் சூழலைப் புலப்படுத்தியுள்ளார். டாக்டர் மு. வ. கருத்தியல்வாதியாக மட்டுமிருந்து பாத்திரங்களைப் படைக்காமல் நடப்பியல்வாதியாகவும் இருந்து பாத்திரங்களைப் படைத்துள்ளார்.

பண்புநல வெளிப்பாடு

படைப்பாளர்கள் பாத்திரங்களின் பண்புகளை மூன்று வகையில் வெளிப்படுத்துவர். (1) படைப்பாளர்களே பாத்திரங்களின் போக்கை நேரடியாக எடுத்துரைத்தல், (2) படைப்பில் உள்ள பாத்திரங்களின் பண்பை மற்ற பாத்திரங்கள் வாயிலாக வெளிப்படுத்துதல், (3) பாத்திரங்களே தங்களின் போக்கை எண்ணி உரைத்தல் ஆகிய மும்முறையில் பாத்திரப் படைப்பு வெளிப்படல் இயல்பு. இவற்றை இருவகையில் அடக்கிக் காண்பதுமுண்டு. ஆசிரியர் நேரடியாகத் தாமே பாத்திரத்தின் போக்கை எடுத்துரைத்தல் நேரடி முறை என்றும், பாத்திரங்களே மற்றப் பாத்திரங்கள் குறித்துக் குறிப்பிடுவதை நாடகப்பாங்கின என்றும் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/80&oldid=1211426" இலிருந்து மீள்விக்கப்பட்டது