பக்கம்:அறவோர் மு. வ.pdf/90

இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.
டாக்டர் சி. பாலசுப்பிரமணியன்
87
 

நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, வாடாமலர் ஆகியன. சமுதாய நிலையை உருவகப்போக்கில் குறிப்பால் உணர்த்தி உள்ளவை கள்ளோ? காவியமோ!, மண்குடிசை ஆகும். இத்தகைய குறிப்புத்திறன் நாவல்களின் கலைத்திறனுக்கு அணிசேர்த்துள்ளன.

நெஞ்சில் ஒரு முள்

நெஞ்சம் உள்ளவர்கள் வாழ்வில் ஒருநாள் செய்து விடுகின்ற தவற்றுக்காக வாழ்நாள் முழுவதும் வருந்துவதுண்டு. அத்தவறு அவர்களின் நெஞ்சில் முள்ளாய் உறுத்திக் கொண்டிருப்பதுண்டு என்பதை - மனச் சான்றினரின் உளப்போக்கைச் சித்திரித்துக் காட்டுவதே ‘நெஞ்சில் ஒரு முள்'. அந்நாவலுக்கு வழங்கியிருக்கும் பெயரே குறிப்புப் பொருளை நன்கு புலப்படுத்துகிறது. 'வடிவு' என்னும் பெண் மணமான பின் பழைய காதலனிடம் தவறி விடுகிறாள். ஒருமுறை செய்கின்ற தவறு பல தவறுகளுக்கு நியாயங்களை உருவாக்கி விடுவதுண்டு. ஆனால் 'வடிவு' செய்த தவறு அவள் நெஞ்சத்தை உயர்த்தி விடுகிறது. எச்செயலிலும் ஒன்றிச் செய்கின்ற மனப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்கிறாள் வடிவு. அவளின் நெறியாலே அவள்தன் கணவன் அகோரமும் மனம் மாறுகிறார். இல்லம் சிறக்கிறது. வாழ்க்கையின் போக்கை மாற்றி, நெறியாளாய்ச் சிறந்தபோதும், முன்பு செய்த தவறு முள்ளாய் உறுத்துகிறது. காலப்போக்கில் அறவாழி எனும் அறவோரால் 'வடிவு 'அமைதி பெறுகிறாள்.

அக்கதையில் இடம்பெறும் விஜயா, இந்திரா இருவரும் தவறி விடுகிறார்கள். விஜயா அம்மையார் தாம் இளமையில் செய்த தவறை எண்ணி வருந்துகிறார். தம் கணவர் மீது வைத்த அன்பில் களங்கமின்றி வாழ்ந்து வருகிறார். ஆனால், அவர்தம் புதல்வி இந்திரா தவறு என்பதை ஒரு குற்றமாக எண்ணாமல் நியாயங்களை உருவாக்கிக் கொள்கிறாள். ஆடம்பரத்தில் நிறைவு கண்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறவோர்_மு._வ.pdf/90&oldid=1224073" இருந்து மீள்விக்கப்பட்டது