பக்கம்:அறிவின் கேள்வி.pdf/10

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

வாக எங்கோ இருப்பதாகச் சொல்லப்படுகிற கடவுளைக் காய்ந்தான் — அவ்விதம் காய்ந்து குமுறுகிறவர்களைக் கதையிலே புகுத்திப் படமாக்கி வெள்ளித் திரையிலே துள்ளவிட்டு, மக்களின் உள்ளத்தில் உண்மை உணர்ச்சியையும் மெள்ள மெள்ள வளரவிட்டால். நாட்டிலே ஒரு சிலரின் கூப்பாடு ‘படத்தைக் காட்ட அனுமதித்ததே தப்பு!’ என்று ஏட்டுக்கார முத்தண்ணாக்கள் தீட்டுகிறார்கள் நாத்திகப் பிரச்சாரமென்று.

இந் நிலைகண்டு சிந்தனை சிரிக்காமல் என்ன செய்யும்? பச்சை வாழைமட்டை பற்றி எரியும்; ஏழு பின்ளைகளைக் கிணற்றிலே தள்ளலாம்; பத்தினி என்றால் கணவனைத் தாசி வீட்டுக்கும் சுமந்து செல்வது தான் நம் நாட்டுப் பண்பாடு; மகனைக் கறி சமைத்துத் தரும்படி கேட்கும் சாமி; காம நாடகங்கள் ஆடுகிற கயமைத்தனக் கடவுளர்கள் பற்றியெல்லாம் புத்தகங்கள் இனாம் பதிப்பு, மலிவுப் பதிப்பு, உயரிய பதிப்பு என்று தயாரித்து விநியோகிப்பது அறிவுடைமை போலும்! இத்தகைய கதைகளையே படமாக்கிக் காட்டுவது தான் தர்மத்தின் பாதுகாப்பு போலும்! இந்தவிதமான அறியாமைக் கருத்துகளை வளர்த்துவர உரிமை உண்டு; ஆனால், சிந்திப்பவர்களுக்கு ஏற்படுகின்ற இயல்பான சந்தேகங்களை ஒலிபரப்ப உரிமை இருப்பது தவறாம்! அந்தகார இருளிலே சிக்கித் திணறி மந்த புத்தி படைத்துவிட்ட அறிவாளிகள்’ அலறத் தொடங்குகிறார்கள். மதத்துக்கு ஆபத்து; கடவுளுக்கு ஆபத்து; பிரம்மத்துக்கு, நாட்டுக்கு, நமக்கே ஆபத்து என்று.

சிந்திப்பவர்களை எண்ணிச் சீறுவதன் முன்பு, சிந்தனைக்குக் கொஞ்சம் வேலை கொடுங்கள் என்று சொல்ல வேண்டியது அவசியமாகிறது. மற்றவர்களுக்கு ‘கடவுள்