பக்கம்:அறிவியல் அகராதி.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புனைவுகளும் புனைவாளர்களும், புனைவுகள் தோன்றிய ஆண்டுகளும் படங்களும் தரப்பட்டுள்ளமை இவ்வகராதியின் தனிச் சிறப்பு

கலைச் சொல்லாக்கம் மிகக் கடினமான பணி அறிஞர்கள் பலர் பல்லாண்டு உழைத்துச் சொல்லாக்கங்களை உருவாக்கி உள்ளனர். அவற்றுள் வலுவுள்ளவை வாழ்வு பெற்றுவிட்டன. வலுவற்றவை வீழ்ந்துவிட்டன. நிலைத்த சொற்கள் அகராதியில் இடம் பெறுவது இயற்கை

அடிப்படை அறிவியலில் உள்ள அனைத்துச் சொற்களையும் வரிசைப்படுத்தித் துல்லியமான விளக்கங்களைச் சிறப்பாகத் தந்தவர் தொகுப்பாசிரியர் அ.கி.மூர்த்தி. இவர் 40 ஆண்டுகளாக அறிவியலைப் பள்ளி மாணவர்களுக்குப் பாடம் நடத்திய அறிவியல் ஆசிரியர். பல அறிவியல் நூல்களை எழுதி விருதுகள் பல பெற்றவர். விண்ணியல், லேசர் அறிவியல், வெப்பநிலை அறிவியல், தொலையுணர் அறிவியல் முதலிய துறைகளில் ஆய்வுக் கட்டுரைகளும், நூல்களும் உருவாக்கியவர். இருமொழிப் புலமைமிக்கவர். விஞ்ஞானத்தின் நுட்பம் உணர்ந்த வித்தகர். அறிவியல் கல்வியில் ஆழங்கால் பட்டவர். இந்த அகராதியை உருவாக்கிய இவர்தம் நன்முயற்சிக்குத் தமிழ் கூறும் நல்உலகம் பெரிதும் கடமைப்பட்டுள்ளது. பெரிய பல்கலைக் கழகம் செய்யவேண்டிய பெரிய பணியினைத் தாம் ஒருவராகவே தனித்து நின்று செய்து சாதனை படைத்துள்ளார்.

அறிவியல் நூல்கள் இப்பொழுது மிகுதியாக எழுதப் பெறுகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அறிவியல் புலம் ஒரு தனித்துறையாக ஓங்கி வளர்ந்து வருகிறது. நாற்பதுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் அறிவியல் பாடங்களை முதல் முதல் தமிழ் மூலம் கற்பிக்கச் சிறந்த நூல்களை உருவாக்கியது. தொண்ணூறுகளில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் இந்த முயற்சியில் வெற்றி நடைபோடுகிறது. தமிழ் வழிக் கல்வி இயக்கம் வேர் கொள்ளும் வேளையில் இந்தப் பெரு நூலை உருவாக்கியுள்ளோம்.

வெறும் வாய்ச்சொல் வீரராக வாழாமல் 21-ம் நூற்றாண்டிற்குத் தமிழை எடுத்துச் செல்லும் சீரிய முயற்சியில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டு இந்தப் பெரிய செயலைச் சிறப்பாகச் செய்து முடித்துள்ளோம்.