பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

அறிவியல் தமிழ்




“செய்யவாய், ஐயோ! என்னைச்

சிந்தை கவர்ந்ததுவே!”[1]

எம்பெருமானை முற்றிலும் அநுபவிக்க வேண்டும் என்று பாரித்திருக்கையில் ‘இடையிலே நெஞ்சைக் கொள்ளை கொண்டு விட்டதே, அதரம்! இதற்கு என் செய்வேன்!’ என்பார், ‘ஐயோ.’ என்கின்றார். சங்கு சக்கரங்களையுடையவனாய், திருத்துழாய் மாலை அணிந்த நீள் முடியனாய், நம் போன்றவர்களும் ஊனக் கண்ணால் காணும்படியாகக் காட்சி தரும் பச்சை மாமலைபோன்ற மேனியின் அழகிற்குத் தப்ப முடிந்தாலும், அன்பர்களின் நலன்களை வினவத் துடித்துக் கொண்டிருக்கும் திருவாயின் அழகுக்குத் தப்ப முடியாது. ‘ஐயோ’! என்பதற்கு, “பண்டே நெஞ்சு பறிகொடுத்த என்னை அநியாயம் செய்வதே! என்று கூப்பிடுகின்றார்” என்பதும், “கல்லை நீராக்கி, நீரையும் தானே கொண்டது” என்பதும் வியாக்கியானம். “ஐயோ” என்றது—ஆச்சரியத்தையாதல், அநுபவிக்க அரிதானபடியையாதல், அநுபவரசத்தையாதல் காட்டுகிறது” என்பர் வேதாந்த தேசிகர்.

அனைத்திற்கும் மேலாக அரங்கத்து அமலனின் திருக்கண்கள் இவரைக் குளிர நோக்கி வசீகரிக்கின்றன. வாயால் சொல்ல முடியாததையும் பேசாத பேச்சாகக் கண்கள் உணரச் செய்து விடுகின்றனவாம். அந்தக் கண்களின் அழகு,

“கரிய வாகிப் புடைபரந்து மிளிர்ந்து
        செவ்வரி யோடி, நீண்ட அப்
பெரிய வாய கண்கள் என்னைப்
        பேதைமை செய்தனவே!”[2]


  1. அமலனதி—7
  2. அமலனாதி—8