பக்கம்:அறிவியல் தமிழ்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறிவியல் தமிழ்

93

பெறுவதால் அறிஞர்களின் சிந்தனையும் அறுபடுகின்றது. இதனால் உருப்படியான முறையில் ஒருநிலையாகப் பெற்ற கலைச் சொல் அகராதிகள் (Standardised technical terms) தோன்ற முடியாத நிலையினைக் காணலாம். இலங்கையிலும் தமிழைப் பயிற்று மொழியாக்கும் முயற்சி நடைபெற்று, பல்லாண்டுகட்கு முன்னரே இளங் கலைப் படிப்பு நிலையில் கலைச் சொற்களை ஆக்கியுள்ளனர் என்பது ஈண்டுக் குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஏற்பட்ட கலைச் சொல் அகராதிகளைக் கூர்ந்து நோக்கினால் இவற்றுள் ஒரே சொல்லுக்குப் பலப்பல சமயங்களில் வெவ்வேறு சொற்கள் மொழி பெயர்ப்பாக அமைந்திருப்பதைக் காணலாம். ஆதலின் இவ் வாக்கத்தில் சில விதிகளை வகுத்துக்கொண்டு அந்நெறிப்படி சொற்களை ஆக்குதல் இன்றியமையாதது. அந் நெறியை ஆய்வதற்கும் ஈண்டு இடம் இல்லை.

உயர்நிலைப் பள்ளிகளின் பாடமுறைகட்கும் பயிற்று மொழிக்கும் ஏற்பவே ஆசிரியர் கல்லூரிகளின் பாட முறைகளும் பயிற்றுமொழியும் அமைதல் வேண்டும் என்ற இன்றியமையாமையை நாளடைவில் உணரலாயினர். ஆகவே, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கட்கு அளிக்கப்பெறும் பயிற்சியும் அதே மொழியில் இருந்தாலன்றிப் பயிற்சி பெறும் ஆசிரியர்கள் தங்களுடைய தொண்டிற்கு இன்றியமையாத தகுதியுடன் வெளியேறுதல் இயலாது என்பதையும் உணர்ந்தனர். ஆசிரியர் கல்லூரிகளில் தமிழ் மொழியே பயிற்று மொழியாகத் தகுதி பெறுவதற்கு முதன் முதலாக அதற்கேற்ற கலைச் சொற்களின் இன்றியமையாமையை உணர்ந்து அதனைத் தொகுத்து வெளியிடும் பொறுப்பினைச் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் ஏற்றுக் கொண்டது. அப் பொறுப்பினை நிறை வேற்றுவதற்கான குழு ஒன்றினை அப்பொழுது தமிழகக்