பக்கம்:அலிபாபா.pdf/15

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



தராசில் பண்டங்களை வைக்கும் தட்டில், அவளுக்குத் தெரியாமல், காஸிமின் மனைவி கொஞ்சம் மெழுகைத் தடவி வைத்திருந்தாள். தராசில் நிறுக்கும் பொருளில் தட்டிலும் சிறிதளவு ஒட்டிக்கொண்டிருந்தால், அதைக் கொண்டு என்ன பொருள் நிறுக்கப்பட்டது என்று கண்டு கொள்ளலாம் என்பது மூத்தவளின் நினைப்பு.

வீட்டிலே அலிபாபா குழி தோண்டிக் கொண்டிருந்தான். அவன் மனைவி நாணயங்களை எடைபோட்டுக் கொண்ருந்தாள். எல்லா நாணயங்களையும் நிறுத்துக் கணக்குச் செய்தபின், இருவருமாக அவைகளைப் பூமிக்குள்ளே புதைத்து மண்ணினால் மூடிவிட்டனர். பின்னர் அலிபாபாவின் மனைவி, தராசையும் கற்களையும் எடுத்துச்சென்று, காஸிம் வீட்டில் சேர்த்துவிட்டு வந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அலிபாபா.pdf/15&oldid=723065" இலிருந்து மீள்விக்கப்பட்டது